திருச்சி முக்கொம்பு மேலணையில் திறக்கப்பட்ட கொள்ளிடம் ஆற்று தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது


திருச்சி முக்கொம்பு மேலணையில் திறக்கப்பட்ட கொள்ளிடம் ஆற்று தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது
x
தினத்தந்தி 10 Sep 2019 10:30 PM GMT (Updated: 10 Sep 2019 7:09 PM GMT)

திருச்சி முக்கொம்பு மேலணையில் திறக்கப்பட்ட கொள்ளிடம் ஆற்று தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. ஆனால் காவிரி தண்ணீர் கடைமடையை இன்னும் எட்டாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

ஜீயபுரம்,

கர்நாடக மாநிலத்தில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கடந்த 1-ந் தேதியன்று வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு, அவை ஒகேனக்கல் வந்து அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வருகிறது. கடந்த 7-ந் தேதியன்று மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியதால், காவிரியில் படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் சேலம், நாமக்கல், ஜேடர் பாளையம் வழியாக கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வந்து, அங்கிருந்து திருச்சி முக்கொம்பு மேலணைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து சேர்ந்தது. நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 61 ஆயிரம் கன அடி வீதம் முக்கொம்பு மேலணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி ஆறு, கொள்ளிடம் ஆறு என இரு ஆறுகளாக பிரிந்து செல்கிறது. காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் அங்கிருந்து தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு சென்று அங்கிருந்து பல்வேறு கிளை வாய்க்கால் மூலம் விவசாய பாசனத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. தண்ணீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக நேற்று மாலை நிலவரப்படி திருச்சி முக்கொம்புவில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 35 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் வெளியேறுகிறது. மேலும் பாசன வாய்க்கால்களான அய்யன்வாய்க்கால், புள்ளம்பாடி, பெருவளை வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் உபரிநீர் வெளியேற்றக்கூடிய கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 26 ஆயிரம் கன அடிவீதம் திறந்து விடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கொள்ளிடம் ஆற்றில் உபரியாக 227 டி.எம்.சி.-க்கும் அதிகமாக தண்ணீர் வீணாக கடலில் சென்று கலந்தது. அதேபோல இந்த ஆண்டும் கொள்ளிடம் ஆற்று தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதே வேளையில் காவிரி டெல்டா பகுதியில் பல இடங்களில் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் குடிமராமத்து பணிகள் முழுமையாக செய்யப்படவில்லை. இதனால், கடைமடை பகுதிக்கு காவிரி தண்ணீர் பாசனத்திற்கு வராததால் விவசாயிகள் வேதனையில் தவித்து வருகிறார்கள். காவிரியில் இருந்து வெண்ணாறு, வடவாறு, வெட்டாறு, குடமுருட்டி, அக்னியாறு போன்ற ஆற்றுப்பகுதிகளில் உள்ள தலைப்பு பகுதிக்கு இன்னமும் காவிரி தண்ணீர் செல்லவில்லை.

கடைமடைக்கு தண்ணீர் செல்லும் தலைப்பு பகுதியில் உள்ள வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. மேலும் டெல்டா பகுதிகள் சில இடங்களில் குடிமராமத்து பணிகள் நடப்பதால் அதில் தண்ணீர் திறந்து விட அதிகாரிகள் மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. கோடை காலத்தில் மராமத்து பணிகளை மேற்கொள்ளாமல் தற்போது மேற்கொண்டு வருவது விவசாயிகளை பெரிதும் பாதிப்படைய செய்துள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் உபரிநீராக வினாடிக்கு 26 ஆயிரம் கன அடிக்கு மேலாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. உபரிநீர் கும்பகோணம் பகுதியில் கீழணை என்ற இடத்தில் இருந்து கீழ்நோக்கி 64 கிலோ மீட்டர் தூரம் பயணித்து நாகப்பட்டினம் பகுதியில் இடது கரையில் கொடியம்பாளையம் என்ற இடத்தில் வங்காள விரிகுடா கடலிலும், வலது கரையில் பழையார் என்ற இடத்திலும் கடலில் வீணாக கலக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் எந்தவொரு தடுப்பணையும் இல்லாததால், அந்த தண்ணீர் பாசனத்திற்கு பயன்படாமல் போகிறது. மாறாக நேரடியாக வீராணம் ஏரிக்கு சென்றடைகிறது. செல்லும் வழியில் நிலத்தடி நீர்மட்டத்தை கொள்ளிடம் ஆற்று தண்ணீர் உயர்த்துகிறது. மோட்டார் பம்பு செட் வைத்து விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு 10 சதவீதம் வரை பாசனத்திற்கான தண்ணீர் பஞ்சத்தை நிவர்த்தி செய்கிறது.

மேலும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டத்தை உயர்த்துவதுடன் உவர்ப்பு நீரை நல்ல தண்ணீராகவும் மாற்றம் செய்கிறது. எனவே, கொள்ளிடம் ஆற்றில் உபரியாக செல்லும் தண்ணீர் முற்றிலும் கடலில் கலக்கிறது என்பது தவறானது என்றும், தேவையான இடத்தில் தடுப்பணைகள் கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது எனவும், ஆனால், தற்போது கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள உபரிநீர் இன்னும் கடல் முகத்துவாரத்தை எட்டவில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே கொள்ளிடம் அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கொள்ளிடம் ஆற்றுக்குள் முக்கொம்பு சுற்றுலா மையத்தின் கரூர் சாலை முகப்பு பகுதியையும், வாத்தலை பகுதியையும் இணைப்பதற்காக ஜல்லிக்கற்கள் மற்றும் மணல் குவியல் மூலம் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த பாலம் மூழ்கின. மேலும் புதிய கதவணை கட்டுமான பணியும் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது. புதிய கதவணைக்காக பூமிக்கு அடியில் சுமார் 18 மீட்டர் முதல் 24 மீட்டர் ஆழம் வரை இறக்கப்பட்ட கான்கிரீட்டுடன் கூடிய இரும்பு தூண்கள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதன் காரணமாக ஆற்றுக்குள் வேலை செய்து கொண்டிருந்த ராட்சத எந்திரங்கள் வெளியேற்றப்பட்டு கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. 

Next Story