தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கனிமொழி எம்.பி. பங்கேற்பு


தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கனிமொழி எம்.பி. பங்கேற்பு
x
தினத்தந்தி 10 Sep 2019 10:30 PM GMT (Updated: 10 Sep 2019 7:41 PM GMT)

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார்.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி துணை செயலாளர் தாயகம் கவி எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. இளைஞர் அணி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினால் உருவாக்கப்பட்டது. அதனை பலப்படுத்த அவர் ஒவ்வொரு கிராமம், கிராமமாக சென்று உழைத்தார். அவரது உழைப்பு, ஆர்வம், பணி காரணமாக, இன்று வலுவான அணியாக இளைஞர் அணி உருவாகி உள்ளது. இன்று முக்கிய பொறுப்பில் உள்ள பலர் இளைஞர் அணியில் இருந்தவர்கள்தான். தி.மு.க. உணர்வு நமது உடலில் ஓடும் ரத்தம் போன்றது. அத்தகைய தி.மு.க. உணர்வு கொண்ட பாரம்பரியத்தை சேர்ந்த உதயநிதி இளைஞர் அணி பொறுப்பேற்று உள்ளார்.

தண்ணீர் தட்டுப்பாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல இடங்களில் லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இளைஞர் அணியினர் குளங்களை தூர்வார தீர்மானித்து இருப்பது சிறப்பானது.

பா.ஜனதா கட்சி மக்களை சாதி, மதத்தின் பெயரால் பிரிக்கும் இயக்கம். தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க., பா.ஜனதாவுக்கு ரத்தின கம்பளம் விரித்து, அதன் கொள்கைகளை தமிழகத்துக்கு கொண்டு வரும் கருவியாக உள்ளது. பலர் சமூக ஊடகங்களில் பொய்யான கருத்துகளை பதிவிடுகிறார்கள். இதனை எதிர்த்து களமாட நாம் சரித்திரம் தெரிந்து இருக்க வேண்டும். இன்றைய கல்வி உள்ளிட்டவற்றை பெற எத்தனை போராட்டங்கள் நடத்தப்பட்டது என்பதை தெரிந்து இருக்க வேண்டும். நீங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடுவது மட்டுமின்றி, தொடர்ந்து களப்பணியாற்ற வேண்டும்.

பின்னோக்கி செல்கிறது

நாளைய தமிழகம் நம் கையில், திராவிட இயக்கத்தின் கையில் கொண்டு வர வேண்டும். தி.மு.க. ஆட்சியில் வளர்ச்சிப்பாதையில் இருந்த தமிழகம் தற்போது பின்னோக்கி செல்கிறது. ஆகையால் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைவது உங்கள் கையில்தான் உள்ளது. அதனை நீங்கள் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் இளைஞர் அணியில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பது, விளாத்திகுளம், கோவில்பட்டி தொகுதிகளில் அ.தி.மு.க. அரசால் தூர்வாரப்படாத கண்மாய்களை கண்டறிந்து விரைவில் தூர்வார நடவடிக்கை எடுப்பது, இளைஞர் அணி சார்பில் அண்ணா பிறந்தநாள் மற்றும் தலைவர் கலைஞர் பிறந்த நாளில் விளையாட்டு, பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை வாசித்தல் போட்டிகள் நடத்தி வருகிறோம். அடுத்த ஆண்டு முதல் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1-ந் தேதி விளையாட்டு போட்டிகள் நடத்துவது என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் இளைஞர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story