தூத்துக்குடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க கடைகள் இடிப்பு


தூத்துக்குடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க கடைகள் இடிப்பு
x
தினத்தந்தி 10 Sep 2019 10:30 PM GMT (Updated: 10 Sep 2019 7:50 PM GMT)

தூத்துக்குடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக கடைகள் இடித்து அகற்றப்பட்டன.

வாகன நிறுத்துமிடம்

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியான ஜெயராஜ் சாலையில் காய்கறி மார்க்கெட் அமைந்து உள்ளது. அந்த பகுதியில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

இதனை தவிர்ப்பதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஜெயராஜ் சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தை இடித்து விட்டு ரூ.10 கோடியே 24 லட்சம் செலவில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. 4 மாடியில் அமையும் இந்த வாகன நிறுத்துமிடத்தில் 74 கார்கள், 192 இருசக்கர வாகனங்களை ஒரே நேரத்தில் நிறுத்தும் வகையில் அமைக்கப்படுகிறது. முதல்தளத்தில் 12 கடைகளும் அமைக்கப்படுகின்றன.

கடைகள் அகற்றம்

இந்த நிலையில் வணிக வளாகத்தை இடிக்க கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மாநகராட்சி சார்பில் அங்குள்ள 31 கடைகளை காலி செய்யும்படி நோட்டீசு வழங்கப்பட்டது. உரிய காலஅவகாசம் முடிந்ததையொட்டி மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் உத்தரவின் பேரில், நேற்று மாலையில் கடைகளை இடித்து அகற்றும் பணியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இந்த பணி முடிவடைந்ததும் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story