பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மணியாச்சி ஓடை தண்ணீரை அந்தியூருக்கு கொண்டுவர நடவடிக்கை - அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்


பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மணியாச்சி ஓடை தண்ணீரை அந்தியூருக்கு கொண்டுவர நடவடிக்கை - அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல்
x
தினத்தந்தி 10 Sep 2019 11:15 PM GMT (Updated: 10 Sep 2019 7:58 PM GMT)

பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மணியாச்சி ஓடை தண்ணீரை அந்தியூருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் தகவல் தெரிவித்தார்.

அந்தியூர்,

அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே புதிய நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி நிழற்குடையை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அந்தியூர் வறட்சியான பகுதியாக உள்ளது. வானம் பார்த்த பூமியாக உள்ள அந்தியூர் பகுதிக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேட்டூர் அணையின் வலது கரை வாய்க்கால் மூலம் உபரிநீரை கொண்டு வந்து அந்தியூர் பகுதியில் உள்ள ஏரிகளில் நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள மணியாச்சி ஓடையில் உள்ள நீரை அந்தியூர் பகுதியில் உள்ள வரட்டுப்பள்ளம் அணைக்கு கொண்டு வருவதன் மூலம் கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி, ஆப்பக்கூடல் ஏரி, வேம்பத்தி ஏரி ஆகிய ஏரிகளுக்கும் தண்ணீர் வந்து சேரும். இதன் மூலம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் உயரும். இதன்காரணமாக விவசாயம் செழிப்படையும். எனவே மணியாச்சி ஓடை தண்ணீரை அந்தியூருக்கு கொண்டு வருவதற்கான திட்ட ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அந்தியூர் பகுதியில் 50 ஆயிரத்துக்கும் ஏற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., பேரூராட்சி முன்னாள் தலைவர் டி.எஸ்.மீனாட்சிசுந்தரம், கூட்டுறவு சங்க தலைவர்கள் பாலுச்சாமி, கிருஷ்ணன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story