மாவட்ட செய்திகள்

அரூர் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி பொதுமக்கள் சாலை மறியல் + "||" + Public blocks road seeking restoration of occupied land near Aroor

அரூர் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அரூர் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
அரூர் அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரூர், 

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வேடகட்டமடுவு ஊராட்சிக்குட்பட்ட டி.அம்மாபேட்டையில், 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள அரசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலத்தை மீட்க கோரி, நேற்று வேடகட்டமடுவு-செங்கம் சாலையில், டி.அம்மாபேட்டை பஸ் நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கோட்டப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அம்மாபேட்டையில் கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலம் மற்றும் பொது கிணறு இருந்த நிலம் ஆகியவற்றை அதேபகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து, தங்கள் பெயரில் பட்டா செய்துள்ளனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் வழியாக, மயானத்திற்கு செல்லும் பாதை குறுகலாக உள்ளது.

எனவே, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலத்தை மீட்க கோரி அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு நிலத்தை அளவீடு செய்ய வரும் போது, ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.