விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காததே பொருளாதார மந்த நிலைக்கு காரணம் - நல்லசாமி பேட்டி


விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காததே பொருளாதார மந்த நிலைக்கு காரணம் - நல்லசாமி பேட்டி
x
தினத்தந்தி 11 Sept 2019 4:00 AM IST (Updated: 11 Sept 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காததே தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு காரணம் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.

நாமக்கல்,

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய நாடு விவசாய நாடு. இங்கு கார் தொழிற்சாலைகளை அனுமதிப்பது அவலம். மத்திய, மாநில பட்ஜெட்டில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் இல்லை. விவசாயம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. அதுவே தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு காரணம் ஆகும்.

வருகிற 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் கள் இயக்கம் போட்டியிடும். கள் இயக்கத்தின் வேட்பாளர் இதர வேட்பாளர்களுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்துவார்.

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். காலத்தில் கொண்டுவந்த கள்ளுக்கான தடையை தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீக்கினால் அவரது மதிப்பும், மரியாதையும் உயரும்.

முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அன்னிய முதலீட்டை ஈர்க்கவேண்டும் என்பதற்காக வெளிநாடு சென்று வந்துள்ளனர். அத்தகைய அன்னிய முதலீடு சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இருக்கவேண்டும். ஏற்கனவே வெளிநாட்டு நிறுவனங்களை சிவப்பு கம்பளம் விரித்து இந்தியாவுக்குள் நுழையவிட்டதன் விளைவாக நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழக அரசு தனி கவனம் செலுத்தவேண்டும்.

தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. அதை நடத்துவதற்கு முன் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். இந்திய தேர்தல் ஆணையமே அந்த தேர்தலை நடத்த வேண்டும். இவ்வாறு நல்லசாமி கூறினார்.

Next Story