மாவட்ட செய்திகள்

வள்ளியூர் அருகே சொத்துத்தகராறில் பயங்கரம்:கணவரை உயிரோடு எரித்துக்கொன்ற மனைவி + "||" + Terrorism near Valliyoor: Wife who burned her husband alive

வள்ளியூர் அருகே சொத்துத்தகராறில் பயங்கரம்:கணவரை உயிரோடு எரித்துக்கொன்ற மனைவி

வள்ளியூர் அருகே சொத்துத்தகராறில் பயங்கரம்:கணவரை உயிரோடு எரித்துக்கொன்ற மனைவி
வள்ளியூர் அருகே சொத்துத்தகராறில் மண்எண்ணெய் ஊற்றி கணவரை உயிரோடு எரித்துக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
வள்ளியூர், 

வள்ளியூர் அருகே சொத்துத்தகராறில் மண்எண்ணெய் ஊற்றி கணவரை உயிரோடு எரித்துக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

காவலாளி

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 68). வெளிநாட்டில் தையல் தொழிலாளியாக வேலை செய்த இவர், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இங்கு தனியார் வங்கி ஒன்றில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்தார். தற்போது உடல்நிலை சரியில்லாததால் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இவருடைய மனைவி மரிய லீலா (62). இவர்களுக்கு சபரி ஆனந்த் (40), டிக்டோ விக்டர் (35) என்ற 2 மகன்களும், அன்ன ஜூலியட் (43), ஞானசெல்வி பிரகாசி (38) என்ற 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.

சபரி ஆனந்த் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வருகிறார். டிக்டோ விக்டர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு, 2 வருடங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி விட்டார். அன்னஜூலியட் உள்ளூரிலும், ஞானசெல்வி பிரகாசி வள்ளியூர் அருகே பண்டாரகுளத்திலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

சொத்துத்தகராறு

பாக்கியராஜூக்கு சொந்தமான வீட்டின் மாடியில் சபரி ஆனந்தும், கீழ் வீட்டில் டிக்டோ விக்டரும் குடும்பத்துடன் வசிக்கிறார்கள். கருத்து வேறுபாடு காரணமாக பாக்கியராஜூம், அவருடைய மனைவி மரியலீலாவும் கடந்த 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதன் காரணமாக வீட்டின் பின்புறம் மரியலீலா வசித்து வருகிறார். அருகில் தனியாக வசித்து வந்த பாக்கியராஜ், தனது இளைய மகன் டிக்டோ விக்டர் வீட்டில் சாப்பிட்டு வந்தார்.

இந்த நிலையில் கண் பார்வை கோளாறு மற்றும் நடக்க முடியாததாலும் பாக்கியராஜ் அவதிப்பட்டு வந்தார். எனவே, தனது சொத்துக்களை மகன்களுக்கு பிரித்துக் கொடுக்க அவர் நினைத்தார். இதை அறிந்த மரியலீலா, சொத்துக்களை தனது பெயரில் எழுதி வைக்குமாறு அவரிடம் தகராறு செய்துள்ளார். ஆனாலும் பாக்கியராஜ் அதனை பொருட்படுத்தாமல், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சர்வேயரை அழைத்து நிலத்தை அளந்து பார்த்துள்ளார். இது மரியலீலாவுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

எரித்துக்கொலை

நேற்று முன்தினம் காலையில் பாக்கியராஜ் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மரியலீலா, தனது கணவர் மீது மண்எண்ணெய் ஊற்றி உயிரோடு எரித்ததாக கூறப்படுகிறது. இதில் தீ உடல் முழுவதும் பற்றி எரிந்ததால் பாக்கியராஜ் அலறினார். சத்தம் கேட்டு ஓடி வந்த மகன்கள் இருவரும் தீயை அணைத்தனர்.

பின்னர் உடல் கருகிய நிலையில் அவரை மீட்டு வள்ளியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் பாக்கியராஜ் உயிரிழந்தார்.

கைது

இந்த பயங்கர கொலை குறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரியலீலாவை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவரை மனைவியே எரித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.