குடிநீர் வினியோக திட்டப்பணிகள் ஆய்வுக்கூட்டம்
மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் வினியோக திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் வினியோக திட்டப்பணிகள் தொடர்பாக கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமலினி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ்பாபு, தலைமை பொறியாளர் ராமச்சந்திரன், செயற்பொறியாளர்கள் சண்முகநாதன், கிரீஷ்குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 429 ஊராட்சிகள், 2,307 குக்கிராமங்கள் உள்ளன. மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 49 கிராம கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலமாக வினியோகிக்கப்படும் குடிநீர் நிலை குறித்து கள ஆய்வு செய்வதற்காக மொத்தம் 32 குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்த குழுவில் தலா 2 பொறியாளர்கள் வீதம் 64 பொறியாளர்கள் கள ஆய்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ஆய்வுக்குழுவினர் ஏறத்தாழ 2,303 ஊரக குடியிருப்புகளில் ஆய்வு செய்து குடிநீர் வழங்கும் நிலை குறித்து வகைப்படுத்தி மாவட்ட கலெக்டருக்கு ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இதேபோல குடிநீரின் தரம் குறித்து பரிசோதனை செய்வதற்காக 3 இளநிலை மற்றும் உதவி நீர் பகுப்பாளர் குழுக்கள் மூலம் 106 குடிநீர் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கை அடிப்படையில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல் திறனை மேலும் அதிகரித்திடவும், தேவைக்கேற்ப புதிய செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்கிட ஏதுவாக வறட்சி நிவாரண திட்டம் மற்றும் பழமை வாய்ந்த திட்டத்தினை புனரமைப்பு செய்தல் ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.7.58 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story