குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுவதாக கூறி அரசு பஸ்சை மறித்து பொதுமக்கள் போராட்டம் ஊட்டி அருகே பரபரப்பு


குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுவதாக கூறி அரசு பஸ்சை மறித்து பொதுமக்கள் போராட்டம் ஊட்டி அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 10 Sep 2019 10:30 PM GMT (Updated: 10 Sep 2019 10:10 PM GMT)

ஊட்டி அருகே குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுவதாக கூறி அரசு பஸ்சை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .

ஊட்டி,

ஊட்டி அருகே குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசுவதாக கூறி அரசு பஸ்சை மறித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .

நுண்உரம் செயலாக்கம் மையம்

ஊட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் தினமும் சேகரமாகும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, வார்டுகள் தோறும் நகராட்சி வாகனங்களில் துப்புரவு பணியாளர்கள் நேரடியாக சென்று வீடு, வீடாக மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்கி வருகின்றனர்.

அவ்வாறு பெறப்பட்ட குப்பைகள் ஊட்டி தீட்டுக்கல் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் தினமும் சுமார் 14 டன் குப்பைகள் சேகரமாகிறது. இதில் காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள் போன்றவை வாகனத்தில் ஏற்றப்பட்டு, காந்தல் இந்திரா காலனி பகுதியில் உள்ள நுண்உரம் செயலாக்கம் மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு மக்கும் குப்பைகள் இயற்கை உரமாக மாற்றப்பட்டு வருகிறது.

சுகாதார சீர்கேடு

அதேபோல் காந்தல் முக்கோணம் பகுதியிலும் நுண்உரம் செயலாக்கம் மையம் உள்ளது. இங்கு மக்கும் குப்பையில் உள்ள மக்காத பொருட்கள் தனியாக பிரித்து எடுக்கப்பட்டு, தொட்டிகளில் நிரப்பட்டு உரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஊட்டியில் நிலவும் சீதோஷ்ண காலநிலையால் மக்கும் குப்பைகள் எளிதில் உரமாவது இல்லை. இதன் காரணமாக தீட்டுக்கல் குப்பை கிடங்கில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அதனை தரம் பிரிக்க முடியாமல், வனத்துறையிடம் கூடுதலாக நிலம் கேட்கப்பட்டது. அதற்கு வனத்துறை அனுமதி அளிக்கவில்லை.

இதனால் ஊட்டி நகரில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் காந்தல் முக்கோணத்தில் உள்ள நுண்உரம் செயலாக்கம் மையத்தில் கொட்டப்பட்டு வந்தன. மேலும் இந்திரா காலனியில் செயல்பட்டு வரும் மையத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அதில் மழைநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்லும் மக்கள்துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பொத்தியபடி செல்கிறார்கள்.

அரசு பஸ் சிறைபிடிப்பு

இந்த நிலையில் நேற்று அப்பகுதி பொதுமக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள நுண்உரம் செயலாக்கம் மையத்தில் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், அதனை இடமாற்றம் செய்யக்கோரியும் திடீரென காந்தல் முக்கோணத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அரசு பஸ்சை பொதுமக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் காந்தலில் இருந்து ஊட்டிக்கு வரும் அரசு பஸ் அங்கேயே நிறுத்தப்பட்டது. மேலும் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி நகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் முரளி சங்கர், ஊட்டி நகர மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிலர் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் இடத்தில் குப்பைகளை கொட்டி வைப்பதால் துர்நாற்றம் வீசுவதாகவும், குப்பை கொட்டும் இடத்தை மாற்ற செய்யக்கோரி அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இடமாற்றம் செய்ய வேண்டும்

அதற்கு இந்திரா காலனியில் கிடக்கும் குப்பைகள் அகற்றப்படும் என்று அதிகாரி கூறினார். அதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் நுண்உரம் செயலாக்க மையத்தில் கிடந்த குப்பைகள் லாரியில் ஏற்றி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காந்தலில் கஸ்தூரிபாய் காலனி, இந்திரா காலனி, புதுநகர், ஸ்லேட்டர் ஹவுஸ் பகுதி, பென்னட் மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வீடுகளையொட்டி நுண்உரம் செயலாக்கம் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு மக்கும் குப்பைகள் அப்படியே கிடப்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.

துர்நாற்றத்தால் மக்களுக்கு தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, மக்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து நுண்உரம் செயலாக்கம் மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story