ரேஷன் கடைகளில் மண்எண்ணெய் அளவை குறைத்ததை கண்டித்து, விவசாய தொழிலாளர்கள்-மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ரேஷன் கடைகளில் மண்எண்ணெய் அளவை குறைத்ததை கண்டித்து, விவசாய தொழிலாளர்கள்-மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Sep 2019 10:15 PM GMT (Updated: 10 Sep 2019 11:51 PM GMT)

ரேஷன் கடைகளில் மண்எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அளவை குறைத்து வழங்குவதை கண்டித்து தஞ்சையில் விவசாய தொழிலாளர்கள், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர், 

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாதர் சங்க மாவட்ட தலைவி கலைச்செல்வி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில தலைவர் லாசர் கலந்து கொண்டு பேசினார்.

ரேஷன் கடைகளில் வழங்கும் மண்எண்ணெய் அளவை குறைத்து வழங்குவதை கைவிட வேண்டும். குடும்பத்திற்கு தலா 3 லிட்டர் வீதம் வழங்க வேண்டும். பாமாயில், சீனி அளவுகளை குறைக்காமல், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும். வறுமைக்கோட்டுக்கு கீழ், மேல் என தரம் பிரித்து, ரேஷன் பொருட்களை குறைத்து, ரேஷன் கடைகளை மூடும் முடிவை கைவிட வேண்டும். பொது வினியோக திட்ட குளறுபடிகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஜீவகுமார், அபிமன்னன், நாகராஜ், மாதர் சங்க நிர்வாகிகள் வசந்தி, கலைச்செல்வி, வசந்தா, மாலதி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாலதி, மாநகர செயலாளர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story