பணியிட மாற்ற உத்தரவால் அதிர்ச்சி மாரடைப்பால் ஆசிரியை சாவு


பணியிட மாற்ற உத்தரவால் அதிர்ச்சி மாரடைப்பால் ஆசிரியை சாவு
x
தினத்தந்தி 11 Sept 2019 3:15 AM IST (Updated: 11 Sept 2019 5:21 AM IST)
t-max-icont-min-icon

திருவிடைமருதூர் அருகே பணியிட மாற்ற உத்தரவால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை மாரடைப்பால் இறந்தார்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருபுவனம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக லதா(வயது 49) என்பவர் பணியாற்றி வந்தார். கல்வி துறையில் பணி நிரவல் அடிப்படையில் கவுன்சிலிங் நடந்தது. திருவிடைமருதூர் ஒன்றியத்தில் 12 ஆசிரியர்கள் பணிநிரவல் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.பணிநிரவல் அடிப்படையில் மூத்த ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும் என ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இந்தநிலையில் பணிநிரவல் அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் வருகிற 12-ம் தேதி(வியாழக்கிழமை) கண்டிப்பாக சென்று பணியில் சேர வேண்டும் என்றும், தற்போது பணியாற்றும் பள்ளிகளில் இருந்து அவர்களை விடுவித்து தலைமைஆசிரியர் ஆணை வழங்க வேண்டும் என்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறப் படுகிறது.

ஆசிரியை லதா பட்டுக்கோட்டை ஒன்றிய பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக அவருக்கு தகவல் கிடைத்தது.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார். இதனால் லதாவை ஆம்புலன்சில் ஏற்றி கும்பகோணம் தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே லதா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story