எந்திரம் மூலம் நெல் விதைப்பு செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும் - வேளாண்மை அதிகாரி தகவல்


எந்திரம் மூலம் நெல் விதைப்பு செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும் - வேளாண்மை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 10 Sep 2019 10:00 PM GMT (Updated: 11 Sep 2019 12:11 AM GMT)

எந்திரம் மூலம் நெல் விதைப்பு செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும் என வேளாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

நயினார்கோவில்,

நயினார்கோவில் பகுதியில் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விதை விதைக்கும் எந்திரம் மூலம் நேரடி நெல் விதைப்பு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையை பயன்படுத்தி ராதாப்புளி கிராமத்தில் நெல் விதைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் விதைக்கும் எந்திரம் மூலம் நெல் விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தில் விதைப்பதன் மூலம் சரியான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க இயலும். ஏக்கருக்கு 16 கிலோ நெல் விதை போதுமானது. வரிசையாக பயிர்கள் சரியான இடைவெளியில் முளைக்கும். மேலும் களை எடுக்கும் பணி, உரமிடுதல், பயிர் பாதுகாப்பு போன்ற பணிகள் செய்ய எளிதாக இருக்கும். விரைவாக பயிர் வளர்ச்சி பெற்ற கதிர்கள் கூடுதலாக வரப்பெற்று 10 நாட்களுக்கு முன்னதாகவே அறுவடைக்கு வந்து விடும். இதுதவிர கூடுதல் மகசூல் கிடைக்கும்.

நேரடி நெல் விதைப்புக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.600 மானியம் வழங்கப்படுகிறது. தற்போது நயினார்கோவில் வேளாண் விரிவாக்க மையத்தில் 110 நாள் வயதுடைய கோ-51 நெல் ரகம் போதுமான அளவு இருப்பில் உள்ளது. நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை விதைக்கும் கருவியை பயன்படுத்தி வருகிற 30-ந்தேதிக்குள் விதைப்பு பணியை நிறைவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விவரங்களை நயினார்கோவில் வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை வேளாண்மை உதவி இயக்குனர் பானு பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Next Story