எந்த தவறும் செய்யாத காரணத்தால் என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது குமாரசாமி சொல்கிறார்


எந்த தவறும் செய்யாத காரணத்தால் என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது குமாரசாமி சொல்கிறார்
x
தினத்தந்தி 11 Sep 2019 10:00 PM GMT (Updated: 11 Sep 2019 5:25 PM GMT)

நான் எந்த தவறும் செய்யாத காரணத்தால், என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

நான் எந்த தவறும் செய்யாத காரணத்தால், என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பழிவாங்கும் அரசியல்

டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் பெங்களூருவில் ஒக்கலிகர் சமுதாயத்தினர் பேரணி மற்றும் போராட்டம் நடத்தி உள்ளனர். இந்த பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. சென்னப்பட்டணாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏற்கனவே நான் வருவதாக கூறி இருந்ததால், அந்த போராட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனது. அப்படி இருந்தும் ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் பேரணி மற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்திற்கு முதலாவதாக எனக்கு அழைப்பு விடுத்திருந்தால், கண்டிப்பாக கலந்து கொண்டு இருப்பேன். டி.கே.சிவக்குமார் கைது விவகாரம் அரசியல் உள்நோக்கத்துடன் நடந்ததாகும். பா.ஜனதாவினர் பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுகின்றனர்.

எதுவும் செய்ய முடியாது

டி.கே.சிவக்குமாருக்கு அடுத்த நான் கைது செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. அதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் சொல்கிறார்கள். என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது. என்னை வழக்குகளில் சிக்க வைத்துவிடலாம் என்று நினைக்கின்றனர். எந்த வழக்கிலும் சிக்கமாட்டேன்.

ஏனெனில் நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் நான் யாருக்காகவும், எதற்காகவும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story