கரூரில் நிதி, மனிதவள மேலாண்மை திட்டத்தில் ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி
கரூரில் நிதி, மனிதவள மேலாண்மை திட்டத்தில் ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி கருவூலக் கணக்கு துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடந்தது.
கரூர்,
தமிழக அரசு ஒருங் கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்திட தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தில் பல்வேறு துறையை சேர்ந்த பணம் பெற்று வழங்கும் ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அரசு கலைக்கல்லூரி, அட்லஸ் கலையரங்கத்தில் 2 நாட்கள் நடந்தது. பயிற்சி நிறைவு நாளில் கருவூலக்கணக்கு துறை முதன்மை செயலாளரும், ஆணையருமான தென்காசி ஜவஹர் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் அன்பழகன் முன்னிலை வகித்தார்.
பயிற்சி நிறைவு நாளில் ஆணையர் ஜவஹர் பேசுகையில், ‘‘கரூர் மாவட்டத்தில் 337 பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள், 13,433 அரசு பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் இதர பட்டியல் சமர்ப்பிக்கும் பணியில் கருவூலங்கள் உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் ரூ.65 கோடியே 51 லட்சத்து 42 ஆயிரத்து 253 சம்பளமாக கருவூலங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கரூர் மாவட்டத்தில் 7,805 ஓய்வூதியர்களுக்கு ரூ.16 கோடியே 11 லட்சத்து 8 ஆயிரத்து 882 ஓய்வூதியமாக ஜூலை மாதத்தில் வழங்கப்பட்டுள்ளது. அரசின் வரவினங்களாக ரூ.18 கோடியே 2 லட்சத்து 70 ஆயிரத்து 857 வரப்பெற்றுள்ளது.
இந்த புதிய திட்டத்தில் ஒரே நாளில் பட்டியலை தயாரித்து, இணையம் வாயிலாக கருவூலத்தில் சமர்ப்பித்து, பயனாளியின் வங்கிக்கணக்கில் உடனடியாக வரவு வைக்க இயலும். இத்திட்டத்தால் நிதி மற்றும் மனிதவள மேலாண்மையில் வெளிப்படைத் தன்மையுடன் துரித சேவையை மக்களுக்கு வழங்க இயலும் என்றார்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், மாவட்ட வன அதிகாரி அன்பு, மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், கரூர் அரசு கல்லூரி முதல்வர் ரோஸி வெண்ணிலா உள்பட அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story