வாணாபுரம் பகுதியில் எந்திரம் மூலம் கரும்பு வெட்டும் விவசாயிகள் ; ஒரே நாளில் 10 ஏக்கர் அறுவடை செய்யப்படுகிறது


வாணாபுரம் பகுதியில் எந்திரம் மூலம் கரும்பு வெட்டும் விவசாயிகள் ; ஒரே நாளில் 10 ஏக்கர் அறுவடை செய்யப்படுகிறது
x
தினத்தந்தி 12 Sept 2019 4:30 AM IST (Updated: 11 Sept 2019 10:59 PM IST)
t-max-icont-min-icon

வாணாபுரம் பகுதியில் எந்திரம் மூலம் ஒரே நாளில் 10 ஏக்கர் வரை கரும்பு அறுவடை செய்யப்படுகிறது.

வாணாபுரம்,

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியான பெருந்துறைபட்டு, சதாகுப்பம், வாழவச்சனூர், அகரம் பள்ளிப்பட்டு, தென்கரும்பலூர், பேராயம்பட்டு, தச்சம்பட்டு, வெறையூர், சின்னகல்லப்பாடி, பெரிய கல்லப்பாடி ஆகிய பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர்.

இங்கு பயிரிடப்படும் கரும்புகளை அறுவடை செய்து அருகில் உள்ள மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். ஆட்களைக் கொண்டு கரும்புகளை அறுவடை செய்து வரும் நிலையில் நடப்பு ஆண்டு கரும்பு அறுவடை செய்யும் பணி கடந்த மாதம் தொடங்கியது.

இந்த நிலையில் கரும்புகளை அறுவடை செய்ய போதுமான ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால் அதிக அளவில் கூலி கொடுத்து ஆட்களை பயன்படுத்தி கரும்பு அறுவடை செய்வதன் மூலம் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலம் கரும்பு அறுவடை எந்திரம் வாங்கப்பட்டது. இந்த எந்திரம் மூலம் தற்போது கரும்பு அறுவடை பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கரும்பு அறுவடை விரைவாகவும், வேகமாகவும் நடைபெறுகிறது. அதே போல் ஆலைக்கு விரைவாகவும் கரும்பு அனுப்புவதற்கு இந்த எந்திரம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் வெட்டுக்கூலி குறைவாக இருப்பது மட்டுமல்லாமல் நாளொன்றுக்கு 5 முதல் 10 ஏக்கர் பரப்பளவு வரை அறுவடை செய்ய முடியும்.

மேலும் இந்த எந்திரம் மூலம் கரும்பு அறுவடை செய்யும் போது சோகைகள் துகள்களாக வருவதால் நிலத்திற்கு உரமாகவும் பயன்படுத்த முடியும். குறைந்த வாடகையில் கரும்பு அறுவடை செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் எந்திரத்தை கொண்டு கரும்பு அறுவடை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்’ என்றனர்.

Next Story