மாவட்ட செய்திகள்

காட்பாடி அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி பலி; டிரைவர் சீட்டில் அமர்ந்து வந்ததால் விபரீதம் + "||" + Schoolgirl dies after falling from auto near Katpadi

காட்பாடி அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி பலி; டிரைவர் சீட்டில் அமர்ந்து வந்ததால் விபரீதம்

காட்பாடி அருகே ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி பலி; டிரைவர் சீட்டில் அமர்ந்து வந்ததால் விபரீதம்
காட்பாடி அருகே, ஆட்டோவில் டிரைவர் சீட்டில் அமர்ந்து பயணித்த பள்ளி மாணவி தவறி விழுந்து பலியானார்.
காட்பாடி,

காட்பாடியை அடுத்த கீழ்வடுகன்குட்டை ஸ்ரீகணபதி நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 42). இவர் காட்பாடியில் வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார். இவரது மகள் மதுலேகா (12). குடியாத்தம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். தினமும் வீட்டில் இருந்து மதுலேகா பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வந்தாள். நேற்று முன்தினம் வழக்கம்போல பள்ளிக்கு சென்று விட்டு ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாள். ஆட்டோவில் அதிக மாணவர்கள் இருந்ததால் மதுலேகா டிரைவர் சீட்டின் ஓரத்தில் இடது பக்கம் அமர்ந்திருந்தாள். அதில் அவளால் சரியாக அமர முடியவில்லை என கூறப்படுகிறது.


இந்த நிலையில் ஆட்டோ, வடுகன்குட்டை பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கிருந்த பள்ளத்தில் ஏறி இறங்கியது. இதில் டிரைவர் சீட்டில் அமர்ந்து வந்த மதுலேகா தவறி கீழே விழுந்தாள். அவளுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.

அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மாணவியை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதுகுறித்து காட்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆட்டோவை ஓட்டி வந்த பழைய காட்பாடி பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் குறிப்பாக மாநகர் பகுதிகளில் ஆட்டோக்களில் அதிக அளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்கின்றனர். இதேபோன்று அசம்பாவிதங்களை தடுக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.