அணைக்கரை கீழணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி


அணைக்கரை கீழணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 11 Sep 2019 10:00 PM GMT (Updated: 11 Sep 2019 5:29 PM GMT)

அணைக்கரை கீழணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மீன்சுருட்டி,

காவிரி டெல்டா பாசனத்திற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டார். வினாடிக்கு 10 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் பாசனத்திற்காக வினாடிக்கு ஆயிரம் கனஅடி திறந்து விடப்பட்ட தண்ணீர் ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி அணைக்கரை கீழணைக்கு வந்தடைந்தது. மீண்டும் கல்லணையில் இருந்து நேற்று முன்தினம் 11 ஆயிரம் கன அடி தண்ணீர் கீழணைக்கு வந்தது.

இதையடுத்து தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை அரியலூர், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் விவசாய பாசனத்திற்கு அரியலூர் மாவட்டம் அணைக்கரை கீழணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, நாகை மாவட்ட கலெக்டர் சுரே‌‌ஷ்குமார் ஆகியோர் அணை மதகுகளை திறந்து வைத்தனர்.

இதை தொடர்ந்து வடவார் தலைப்பில் வினாடிக்கு 1,800 கன அடியும், வடக்கு ராஜனில் 400 கன அடியும், தெற்கு ராஜனில் 400 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் கீழணையிலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு நேரடி பாசனத்திற்கு 47 ஆயிரத்து 997 ஏக்கர் நிலங்களும், வடவார் வாய்க்கால் மூலமாக வீராணம் ஏரியில் நிரப்பி அதன் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசன நிலங்களும் மற்றும் தஞ்சாவூர், நாகை மாவட்டங்களுக்கு நேரடி பாசனம் மூலமாக 39 ஆயிரத்து 50 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 1 லட்சத்து 31 ஆயிரத்து 903 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

மேலும் பாசன வசதிக்கேற்ப தண்ணீர் அளவு மாற்றி அமைக்கப்பட்டு அனைத்து பாசன வாய்க்கால்களிலும் தொடர்ந்து வழங்கப்படும். பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கல்யாண சுந்தரம், கண்காணிப்பு பொறியாளர் ரவிமனோகர், செயற்பொறியாளர் மணிமோகன், உதவி செயற்பொறியாளர் அருணகிரி, உதவி பொறியாளர்கள் வெற்றிவேல், முத்துக்குமரன், ரமே‌‌ஷ் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story