ஓடும் ரெயிலில் இருந்து குதித்து கைக்குழந்தையுடன் தம்பதி தற்கொலை? - போலீசார் விசாரணை


ஓடும் ரெயிலில் இருந்து குதித்து கைக்குழந்தையுடன் தம்பதி தற்கொலை? - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Sept 2019 4:00 AM IST (Updated: 12 Sept 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே ஓடும் ரெயிலில் இருந்து குதித்து கைக்குழந்தையுடன் தம்பதி தற்கொலை செய்து கொண்டனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ராமகிருஷ்ணம்பதியில் சேலம்-ஜோலார்பேட்டை செல்லும் ரெயில் தண்டவாளத்தில் 25 வயது மதிக்கத்தக்க ஆண், 22 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தை உடல் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தனர். இதைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், அவர்கள் இது குறித்து கல்லாவி போலீஸ் நிலையத்திற்கும், சேலம் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும், இது குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியனும் சம்பவ இடத்திற்கு சென்றார். இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.

இறந்தவரின் சட்டைப்பையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளி பிரிவில் சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ சீட்டு ஒன்று இருந்தது. அதில் விஜயன் என்ற பெயர் இருந்தது. மேலும், அந்த நபர் அணிந்திருந்த டி-சர்ட்டில் ஆர்.எஸ்.புரம் என்று எழுதப்பட்டுள்ளது. இதனால் அவர் கோவையை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், அவர்கள் ரெயிலில் இந்த வழியாக சென்ற போது படிக்கட்டு வழியாக தவறி விழுந்து இறந்தனரா? அல்லது ரெயிலில் இருந்து கைக்குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டனரா? என தெரியவில்லை. இதைத் தொடர்ந்து 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story