ஸ்கூட்டரில் தனியாக சென்ற பெண்ணிடம், மதுபோதையில் ஆபாசமாக பேசிய போலீஸ்காரர் பணிஇடை நீக்கம்


ஸ்கூட்டரில் தனியாக சென்ற பெண்ணிடம், மதுபோதையில் ஆபாசமாக பேசிய போலீஸ்காரர் பணிஇடை நீக்கம்
x
தினத்தந்தி 12 Sept 2019 4:00 AM IST (Updated: 12 Sept 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

ஸ்கூட்டரில் தனியாக சென்ற பெண்ணிடம் மதுபோதையில் ஆபாசமாக பேசிய போலீஸ்காரரை பணி இடைநீக்கம் செய்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் உத்தரவிட்டார்.

சரவணம்பட்டி,

கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். போலீஸ்காரரான இவர் உயர்போலீஸ் அதிகாரி ஒருவரின் ஜீப் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் மாலை தனது பணியை முடித்துக்கொண்டு சீருடையில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அவர் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து அத்திப்பாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அதே வழியில், பொியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஸ்கூட்டரில் சரவணம்பட்டியை அடுத்த கீரணத்தத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றுகொண்டு இருந்தார்.

தனக்கு முன்னால் ஸ்கூட்டரில் தனியாக சென்ற அந்த பெண்ணை, போலீஸ்காரர் பிரபாகரன் பின்தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. இதை கவனித்த அந்த பெண், தன்னை போலீஸ்காரர் ஒருவர் தேவையின்றி விரட்டுவதாக உணர்ந்தார்.

ஒரு கட்டத்தில் அந்த பெண்ணை வழிமறித்த பிரபாகரன், நீ அழகாக இருக்கிறாய்.. உன் கண்கள் அழகாக இருக்கின்றன... நீ அழகு நிலையம் தானே வைத்து இருக்கிறாய் என்றெல்லாம் வர்ணித்துள்ளார். பின்னர் ஆபாசமாகவும் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பயந்து போன அந்த பெண் அங்கு இருந்து ஸ்கூட்டரை வேகமாக இயக்கினார். பாதுகாப்புத்தேடி அத்திப்பாளையம் அருகே இருந்த ஒரு பேன்சி கடைக்கு சென்றார். அங்கும் சென்ற போலீஸ்காரர் அந்த பெண்ணிடம் அத்துமீற முயன்றதுடன், ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பெண் தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து பெண்ணின் கணவர் தனது உறவினர்களுடன் பேன்சி கடைக்கு சென்றார்.

அங்கு பிரபாகரனிடம் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது பிரபாகரன் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் சீருடையில் இருந்ததால் அடிக்காமல் செல்கிறோம் என்று கூறியவாறு பிரபாகரனை அவர்கள் கோவில்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை துரத்திச்சென்று மதுபோதையில் தகராறு செய்த போலீஸ்காரர் பிரபாகரனை பணி இடைநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story