எரியோட்டில், கல்குவாரி குட்டையில் மூழ்கி சுமைதூக்கும் தொழிலாளி சாவு


எரியோட்டில், கல்குவாரி குட்டையில் மூழ்கி சுமைதூக்கும் தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 11 Sep 2019 9:45 PM GMT (Updated: 11 Sep 2019 6:49 PM GMT)

எரியோட்டில் கல்குவாரி குட்டையில் மூழ்கி சுமை தூக்கும் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

வேடசந்தூர், 

திண்டுக்கல்லை அடுத்த ஏ.வெள்ளோடு அருகே உள்ள எல்லப்பட்டியை சேர்ந்தவர் நடராஜ் (வயது 45). சுமை தூக்கும் தொழிலாளி. அவருடைய மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் எரியோட்டில் தங்கியிருந்து கடைகளுக்கு வாகனங்களில் கொண்டு வரப்படும் பொருட் களை ஏற்றி இறக்கி வந்தார்.

நேற்று முன்தினம் மாலை இவர், எரியோடு-கோவிலூர் சாலையோரத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் தேங்கிய நீரில் குளிக்க சென்றார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளிப்படி கூச்சல் போட்டார்.

இதையடுத்து அங்கு குளித்து கொண்டிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் மருதை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் தண்ணீரில் மூழ்கிய நடராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் தேடியும் அவருடைய உடலை மீட்க முடியவில்லை. மேலும் இரவு நேரம் ஆகி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இதற்கிடையே நேற்று காலை கல்குவாரி குட்டையில் அவருடைய உடல் மிதந்தது. எரியோடு போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story