மணமேடை ஏற இருந்தவர் கைதானார்: புதுமாப்பிள்ளை ஓட்டிச் சென்ற கார் மோதி மாநகராட்சி பணியாளர் பலி


மணமேடை ஏற இருந்தவர் கைதானார்: புதுமாப்பிள்ளை ஓட்டிச் சென்ற கார் மோதி மாநகராட்சி பணியாளர் பலி
x
தினத்தந்தி 11 Sep 2019 10:30 PM GMT (Updated: 11 Sep 2019 8:20 PM GMT)

மதுரையில் புதுமாப்பிள்ளை ஓட்டிச் சென்ற கார் மோதி மாநகராட்சி பணியாளர் பலியானார். மணமேடை ஏறச் சென்ற புதுமாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர்.

மதுரை,

இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-

மதுரை அண்ணாநகர் கரும்பாலை பி.டி.காலனியைச் சேர்ந்தவர் தமிழரசன் (வயது 43). இவர் மதுரை மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். நேற்று காலை கோமதிபுரம் மருது பாண்டியன் நகரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பு தமிழரசன் மற்றும் சக துப்புரவு பணியாளர்கள் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார், திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அந்த கார் எதிர்பாராத விதமாக துப்புரவு பணியாளர்கள் மீது மோதியது.

இதில் தமிழரசன் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். தமிழரசனை சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே தமிழரசன் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கு அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் நின்றிருந்தவர்கள் காரில் வந்தவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இது குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் காரை ஓட்டி வந்தது மதுரை மேலமடையைச் சேர்ந்த நிஷாந்த் என்ற ஜெகநாதன்(24) என்று தெரியவந்தது. அவர் பெங்களூருவில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே காதலியை கரம்பிடித்த நிலையில் நேற்று உறவினர்கள் முன்னிலையில் அவர்களுக்கு திருமணம் நடக்க இருந்தது. இதற்காக காரை ஓட்டிச் சென்ற போதுதான், அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு சரக்கு வேனை இடித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட பிரச்சினையை முடித்துவிட்டு கிளம்பிய போது மீண்டும் விபத்து நடந்து துப்புரவு பணியாளர் உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் ஜெகநாதனை கைது செய்தனர். நேற்று நடக்க இருந்த திருமணம் நின்று போனது. மணமேடை ஏற இருந்தவர் கைதானது அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.

Next Story