விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு அனுமதி வழங்க திட்டம் - அமைச்சர் நமச்சிவாயம் தகவல்
புதுவையில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு ஒருமுறை முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் அனுமதி அளிக்க உள்ளோம் என்று அமைச்சர் நமச்சிவாயம் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி அக்கார்டு ஓட்டலில் “தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய இந்திய நிலப்படத் தொகுப்பு மற்றும் பேரழிவு தடுப்பு வடிவமைப்பு, கட்டுமான நடைமுறைகள்” என்ற தலைப்பில் பயிலரங்கம் நடந்தது. இதில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இயற்கை சீற்றங்களில் இருந்து மனிதர்களை பாதுகாத்துக்கொள்ள இந்த பயிலரங்கம் தேவை. எந்த ஒரு செயலை செய்தாலும் திட்டமிடுதல் மிகவும் அவசியம். பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் வெள்ளம், புயல், நில நடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இதை எதிர்கொண்டு வாழ திட்டமிடுதல் அவசியம். இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ள நம்மை தயார்படுத்தி கொண்டால்தான் பேரழிவுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். கட்டுமானத் துறையில் உள்ள பல்வேறு சவால்களை முறியடிக்க திட்டமிடுதல் வேண்டும்.
இயற்கை சீற்றங்களை தாங்கக்கூடிய கட்டிடங்களை உருவாக்க வேண்டியது பொறியாளர்களின் கடமை. முன்பு கட்டிடங்கள் கட்டும்போது திட்டமிடுதல் மற்றும் மதிப்பீடு மட்டுமே தயார் செய்வோம். தற்போது அவைகளுடன் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்ளக்கூடியதையும் பார்க்க வேண்டியுள்ளது. இல்லையென்றால் பெருத்த உயிர்சேதமும், நஷ்டமும் ஏற்படும்.
புதுவை மாநிலத்தில் மனை விற்பனையை வரை முறைப் படுத்தியுள்ளோம். முறையாக சாலை மற்றும் பொது பயன்பாட்டுக்கு இடம் ஒதுக்க வேண்டும். சட்ட விதிகளை கடைபிடிக்காவிட்டால் மனைகளை விற்க முடியாது. புதுச்சேரி நகர திட்டக் குழுமம் மாஸ்டர் பிளான் தயாரித்துள்ளது. அதற்கு ஒப்புதல் பெற்று ஒரு மாதத்தில் மாஸ்டர் பிளான் அறிவிக்கப்பட உள்ளது. விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு ஒருமுறை முறைப்படுத்துதல் திட்டம் மூலம் அனுமதி அளிக்க உள்ளோம்.
புதுச்சேரியில் குடிநீர் சவாலான விஷயமாக உள்ளது. தரமான குடிநீர் கொடுப்பது அரசின் லட்சியம். வருங்கால சந்ததிக்கு நிலமும், பணமும் சேர்ப்பது சொத்து அல்ல. சுத்தமான காற்று, நீர், நிம்மதியாக வாழும் சூழல் உருவாக்கித்தர வேண்டியதுதான் அவர்களுக்கான சொத்து. அதனால்தான் மழைநீர் சேமிப்பை முக்கியமாக வலியுறுத்தி வருகின்றோம். பசுமை கட்டிடங்களை ஊக்குவித்து வருகின்றோம்.
புதுவையில் மணல் தட்டுப்பாட்டை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்ய 7 பேருக்கு அனுமதி அளித்தோம். ஒருவர் மட்டும்தான் மணலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தார். அதுவும் அரைகுறை அனுமதி பெற்றதால் தற்போது மணல் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது அரசின் தவறு அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story