இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: நெல்லையில் வாகன சோதனை தீவிரம்


இம்மானுவேல் சேகரன் நினைவு தினம்: நெல்லையில் வாகன சோதனை தீவிரம்
x
தினத்தந்தி 12 Sept 2019 3:45 AM IST (Updated: 12 Sept 2019 4:06 AM IST)
t-max-icont-min-icon

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி நெல்லையில் நேற்று வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

நெல்லை, 

தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவு இடத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் மாநிலம் முழுவதும் இருந்து சென்றனர்.

நெல்லை மாவட்டத்தில் இருந்தும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளும் சென்றனர். இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்துவாகன சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பரமக்குடிக்கு செல்லும் வாகனங்களில் ஆயுதங்கள் ஏதாவது இருக்கிறதா? என போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். சந்தேகப்படும் படியான நபர்கள் பெயர்கள், விலாசம், செல்போன் விவரங்களை போலீசார் ஆவணங்களில் பதிவு செய்தனர்.

குறிப்பிட்ட வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது என ஒரு சில வாகன சோதனை சாவடியில் போலீசார் கட்டுப்பாடு விதித்தனர். வழக்கமாக உள்ள சோதனை சாவடிகள் தவிர கூடுதலாக தற்காலிக வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

பாளையங்கோட்டை கே.டி.சி.நகர், வி.எம்.சத்திரம், தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள வாகன சோதனை சாவடியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அதே போல் நெல்லை மாவட்டத்தில் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டது.

Next Story