பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதால் சாமுண்டி மலையில் 97 கடைகள் அகற்றம் வியாபாரிகள் போராட்டம்-பரபரப்பு


பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதால் சாமுண்டி மலையில் 97 கடைகள் அகற்றம் வியாபாரிகள் போராட்டம்-பரபரப்பு
x
தினத்தந்தி 13 Sept 2019 4:00 AM IST (Updated: 12 Sept 2019 10:55 PM IST)
t-max-icont-min-icon

பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதால் மைசூரு சாமுண்டி மலையில் 97 கடைகள் இடித்து அகற்றப்பட்டது.

மைசூரு, 

பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதால் மைசூரு சாமுண்டி மலையில் 97 கடைகள் இடித்து அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாமுண்டி மலை

மைசூரு சாமுண்டி மலையில் உலக புகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலை சுற்றி பூஜைபொருட்கள் கடைகள், ஓட்டல்கள், அழகு பொருட்கள் விற்பனை கடைகள் என நூற்றுக்கணக்கான கடைகள் வைக்கப்பட்டுள்ளன.

சாமுண்டி மலையில் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால், விழா காலங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதுதொடர்பாக பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் ஏராளமான புகார்கள் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், சாமுண்டி மலையில் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

97 கடைகள் இடித்து அகற்றம்

இதற்காக கடைகளின் விவரங்களை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்தது. அப்போது, அங்குள்ள 97 கடைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதில் 45 கடைகள் உரிய அனுமதி பெற்றும், 52 கடைகள் எந்த அனுமதியும் பெறாமலும் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 97 கடைகளுக்கும் நோட்டீசு அனுப்பப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கையும் விடுத்தனர்.

ஆனால் அவர்களின் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில், நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள், பொக்லைன் எந்திரங்களுடன் சாமுண்டி மலைக்கு சென்றனர். அவர்கள் அங்குள்ள 97 கடைகளை இடித்து அகற்றினர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

போராட்டம்-பரபரப்பு

அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை கண்டித்து நேற்று அங்குள்ள வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்களை தடுக்கவும் வியாபாரிகள் முயன்றனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வியாபாரிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதையடுத்து கடைகள் இடித்து அகற்றப்பட்டன. வியாபாரிகளின் போராட்டத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story