மாவட்ட செய்திகள்

பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக செயல்பட ஓ.ராஜாவுக்கு தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Act as president of the Dairy Producers Association Prohibition to O.Raja

பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக செயல்பட ஓ.ராஜாவுக்கு தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக செயல்பட ஓ.ராஜாவுக்கு தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக ஓ.ராஜா செயல்பட தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த அமாவாசை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை,

பழனிசெட்டிபட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக உள்ளேன். நிர்வாக காரணங்களுக்காக, மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் 2-ஆக பிரிக்கப்பட்டு, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது.

இதையடுத்து தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 4 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 13 உறுப்பினர்களை தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் எந்த முன்னறிவிப்பும் இன்றி, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு 17 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2-ந்தேதி பதவியேற்றுள்ளனர். இவர்களின் மூலம் சங்கத்தின் இடைக்கால நிர்வாக குழு ஏற்படுத்தப்பட்டு, சங்கத்தின் தலைவராக ஓ.ராஜாவை நியமித்துள்ளனர்.

இதில் துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள். இந்த இடைக்கால குழு தேர்வு செய்யப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது.

எனவே சங்கத்துக்கு தேர்தல் நடத்தி, வெளிப்படையாக உறுப்பினர்கள் மற்றும் தலைவரை தேர்வு செய்யவும், அதுவரை இடைக்கால குழு செயல்பட தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “தேனி பால் கூட்டுறவு சங்கத்தின் 17 உறுப்பினர்கள் நியமனம் தற்காலிகமானதுதான். தேர்தல் நடத்தி நிரந்தர உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதாடினார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இடைகால நிர்வாகக்குழு மற்றும் உறுப்பினர்கள் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்த உத்தரவால் அந்த சங்கத்தின் தலைவராக ஓ.ராஜா செயல்பட தடை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.