மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகளை அகற்ற நவீன எந்திரம்


மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகளை அகற்ற நவீன எந்திரம்
x
தினத்தந்தி 13 Sept 2019 4:00 AM IST (Updated: 13 Sept 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரம் கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுப்பொருட்களை அகற்றும் நவீன எந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது.

மாமல்லபுரம்,

சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்தில் ஒரு முறை பயன்படுத்தப்பட்டு வீசி எறியும் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்களை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் பிளாஸ்டிக் கவர்கள், பைகளை எடுத்து வருகின்றனர்.

பின்னர் இவற்றை கடற்கரை பகுதியில் வீசி எறிகின்றனர். இதனால் மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள், டம்ளர்கள் சிதறிக்கிடக்கின்றன.

மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பச்சை, மஞ்சள், நீல நிற குப்பைத்தொட்டிகள் அமைக்கப்பட்டன. ஆனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் இந்த குப்பை தொட்டிகளை பயன்படுத்தாமல் கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்கள், உணவு கழிவுகளை வீசி எறிவதால் கடற்கரை மணலில் இவை மலைபோல் குவிந்து அசுத்தமாக காட்சி அளித்தன.

பேரூராட்சி துப்புரவு ஊழியர்களுக்கும் இவற்றை அகற்றுவதில் பெரும்சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரம் கடற்கரையை தூய்மைப்படுத்த நவீன வசதிகளுடன் கூடிய குப்பை அகற்றும் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

சென்னை மெரினா, பெசன்ட்நகர், எலியட்ஸ் ஆகிய கடற்கரை பகுதிகளை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இவை வாங்கப்பட்டு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட இந்த நவீன குப்பை அகற்றும் எந்திரம் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இனி துப்புரவு பணியாளர்களின் உதவியின்றி கடற்கரையில் குவியும் குப்பைகளை தானாகவே இந்த எந்திரம் அகற்றி கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் என்று மாமல்லபுரம் பேரூராட்சி துப்புரவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story