தூத்துக்குடி அருகே அதிநவீன பால் பண்ணை அமைக்க நடவடிக்கை மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை தகவல்


தூத்துக்குடி அருகே அதிநவீன பால் பண்ணை அமைக்க நடவடிக்கை மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை தகவல்
x
தினத்தந்தி 13 Sept 2019 3:00 AM IST (Updated: 13 Sept 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே அதிநவீன பால் பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை கூறினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே அதிநவீன பால் பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை கூறினார்.

கலந்தாய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆவின் முகவர்கள் கலந்தாய்வு கூட்டம் நேற்று காலை தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொது மேலாளர் திரியேகராஜ் தங்கையா முன்னிலை வகித்தார். விற்பனை மேலாளர் சாந்தி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னத்துரை பேசியதாவது:-

50 ஆயிரம் லிட்டர்

நெல்லை மாவட்டத்துடன் இணைந்து இருந்ததால், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் விற்பனை குறைவாகவே உள்ளது. தற்போது நாள் ஒன்றுக்கு சுமார் 21 ஆயிரம் லிட்டர் பால் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனை முதல்கட்டமாக இந்த ஆண்டு இறுதிக்குள் 30 ஆயிரம் லிட்டராக அதிகரிக்க வேண்டும். ஒரு மாவட்டத்தில் ஆவின் நிறுவனம் தனியாக செயல்பட வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 50 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட வேண்டும். இந்த இலக்கை எட்ட உங்கள் ஒத்துழைப்பு அவசியம் தேவை.

தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு, ஓட்டப்பிடாரம், செக்காரக்குடி, ராமானுஜம்புதூர், அமுதுன்னாகுடி, நாசரேத் ஆகிய 6 இடங்களில் மொத்த பால் குளிர்விப்பான் மையங்களும், கோவில்பட்டில் ஒரு குளிரூட்டும் நிலையமும் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 26 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. விற்பனையை அதிகரித்தால் மட்டுமே, உற்பத்திக்கான திட்டங்களை செயல்படுத்த முடியும்.

ஆவின் பார்லர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு ஆவின் பால் சென்றடையாமல் உள்ளது. ஆவின் பால் விற்பனை இல்லாத இடங்களில் ஆர்வம் உள்ளவர்கள் அணுகினால், அவர்களுக்கு விற்பனை முகவர் அனுமதி அளிக்கப்படும். தற்போது 185 முகவர்கள் உள்ளனர். இதனை 500 முகவர்களாக மாற்ற வேண்டும்.

மாவட்டத்தில் தற்போது 37 ஆவின் பார்லர்கள் உள்ளன. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் 24 மணி நேரமும் செயல்படும் ஆவின் பார்லர்கள் திறக்க உள்ளோம். ஆவின் பார்லர்களில் ஆவின் பால் உபபொருட்கள் மக்களுக்கு எல்லா நேரங்களிலும் கிடைக்கும் வகையில் இருப்பு வைத்து இருக்க வேண்டும். தூத்துக்குடியில் கடற்கரை அல்லது பூங்கா அருகில் அதிநவீன ஆவின் பாலகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.

பால் பண்ணை

தூத்துக்குடி அருகே தமிழக அரசு சார்பில் அதிநவீன எந்திரங்கள் கொண்ட மத்திய பால் பண்ணை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் தனி அலுவலகம் திறக்கப்பட உள்ளது. 2 மாதத்துக்கு ஒருமுறை முகவர்கள் கூட்டம் நடத்தப்படும். முகவர்களின் தேவைகள் நிறைவேற்றி தரப்படும். நீங்கள் விற்பனையை அதிகரிக்க வேண்டும். முகவர்களுக்கான பால் விற்பனை கமிஷன் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பால் பாக்கெட்டுகள் சேதம் அடைந்தால், அதனை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஆவின் பால் முகவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story