நினைவு தினம் அனுசரிப்பு: எட்டயபுரத்தில் பாரதியார் வேடம் அணிந்த மாணவர்கள் ஊர்வலம்


நினைவு தினம் அனுசரிப்பு: எட்டயபுரத்தில் பாரதியார் வேடம் அணிந்த மாணவர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 12 Sep 2019 10:00 PM GMT (Updated: 12 Sep 2019 7:21 PM GMT)

பாரதியார் நினைவு தினத்தையொட்டி, எட்டயபுரத்தில் அவரது வேடம் அணிந்த மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

எட்டயபுரம், 

பாரதியார் நினைவு தினத்தையொட்டி, எட்டயபுரத்தில் அவரது வேடம் அணிந்த மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

பாரதியார் நினைவு தினம்

மகாகவி பாரதியார் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவர் பிறந்த ஊரான எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், பாரதியார் பிறந்த இல்லத்தில் உள்ள அவரது மார்பளவு சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

எட்டயபுரம் தாசில்தார் அழகர், கிராம நிர்வாக அலுவலர்கள் முத்துகுமார், ஸ்ரீதேவி, கிராம நிர்வாக உதவியாளர் மாரியப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

பாரதியார் வேடம் அணிந்த மாணவர்கள்

பாரதியார் நினைவு தினத்தையொட்டி, எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து தொடக்கப்பள்ளி, மாரியப்ப நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 98 பேர் பாரதியார் மற்றும் அவருடைய மனைவி செல்லம்மாள் போன்று வேடம் அணிந்து மணிமண்டபத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள், பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவர்கள், பாரதியாரின் பாடல்களை பாடி, வந்தே மாதரம் என்று கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து குழந்தைகளை பாதுகாப்போம், குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவோம், குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவோம், குழந்தைகளுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்துவோம் என்று கூறி அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

ஊர்வலம்

பின்னர் பாரதியார் வேடம் அணிந்த மாணவர்கள், பாரதியாரின் பாடல்களை பாடியவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, பாரதியார் பிறந்த இல்லத்தை அடைந்தனர். பின்னர் அங்குள்ள பாரதியாரின் மார்பளவு சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.

விழாவில் ரோட்டரி சங்க மாவட்ட ஆளுனர் ஷேக் சலீம், சங்க துணை ஆளுனர் பாபு, சங்க முன்னாள் துணை ஆளுனர் சீனிவாசன், மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், சாலை பாதுகாப்பு பிரிவு தலைவர் முத்துசெல்வம், செயலாளர் முத்து முருகன், தலைமை ஆசிரியர்கள் லால் பகதூர் கென்னடி, சேர்மத்தாய் (பொறுப்பு) மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

சமத்துவ மக்கள் கட்சி

எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் உள்ளிட்டவர்களும் பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story