திருமானூர் அருகே படகு கவிழ்ந்ததில், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண் பிணமாக மீட்பு-2 பேரின் கதி என்ன?


திருமானூர் அருகே படகு கவிழ்ந்ததில், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண் பிணமாக மீட்பு-2 பேரின் கதி என்ன?
x
தினத்தந்தி 12 Sep 2019 11:15 PM GMT (Updated: 12 Sep 2019 11:16 PM GMT)

திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெண் தஞ்சை அருகே பிணமாக மீட்கப்பட்டார். மற்ற 2 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் மேலராமநல்லூர், கீழராமநல்லூர் ஆகிய 2 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் கொள்ளிடம் ஆற்றுக்கு இடையே தீவு போல அமைந்துள்ளன. திருமானூர் பகுதியில் இருந்து மேலராமநல்லூர் செல்வதற்கு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே இடதுபுறம் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மேலராமநல்லூரில் இருந்து மறுகரையான தஞ்சை செல்வதற்கு பாலம் இல்லை.

இந்த கிராமங்களுக்கு அரியலூர் மாவட்டமாக இருந்தாலும் பெரும்பாலும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம், கபிஸ்தலம் உள்ளிட்ட இடங்களுக்கே கிராம மக்கள் சென்று வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களும் தஞ்சை, கும்பகோணம் போன்ற இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலேயே பயின்று வருகின்றனர். கொள்ளிடம் ஆற்றில் பெரும்பாலும் தண்ணீர் இருப்பதில்லை. தண்ணீர் இல்லாத நேரத்தில் ஆற்றை கடந்து சென்று விடுவார்கள். தொடர்ந்து மழை பெய்தாலோ, கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டாலோ முழங்கால் அளவுக்கு தண்ணீர் இருக்கும். அப்போதும் தண்ணீரில் நடந்து சென்று விடுவார்கள்.

இந்நிலையில், கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால் அங்குள்ள அணைகள் நிரம்பின. இதனால், காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் மேட்டூரை அடைந்து அங்கிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் முக்கொம்பு மேலணையை அடைந்து காவிரியிலும், கொள்ளிடத்திலும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், இரு ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இந்த தண்ணீர் மேற்கண்ட இரு கிராமங்களையும் வந்தடைந்து ஒருஆள் மட்டத்துக்கு ஓடுகிறது.

இந்நிலையில் மேலராமநல்லூரில் உள்ள கோவிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம், பட்டுக்குடி, கருப்பூர், நாயக்கர்பேட்டை போன்ற கிராமங்களை சேர்ந்த சிறுவர்-சிறுமிகள், பெண்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் மேலராமநல்லூர் வந்தனர். பின்னர், கோவில் விழாவை முடித்துக்கொண்டு மாலை 5.30 மணியளவில் அனைவரும் மோட்டார் படகு ஒன்றில் ஏறி ஆற்றில் சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணன் என்பவர் படகை ஓட்டினார்.

ஆற்றின் நடுப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்தது. இதனால், படகில் உள்ள மோட்டாரில் தண்ணீர் புகுந்து பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. போதிய வெளிச்சமும் இல்லாததால் படகில் இருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர். சிறிது நேரத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்தது. அனைவரும் ஆற்றில் விழுந்து தத்தளித்தனர். அவர்களில் 15-க்கும் மேற்பட்டோர் நீந்தி ஆற்றின் மணல் திட்டில் ஏறி நின்று கொண்டனர். மற்றவர்கள் அபயகுரல் எழுப்பினர். அவர்களில் 10-க்கும் மேற்பட்டோரை படகோட்டி கிருஷ்ணன் மற்றும் இளைஞர்கள் மீட்டு மணல் திட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் மேலராமநல்லூர் கிராமமக்கள், வெல்லம் காய்ச்ச பயன்படுத்தும் கொப்பரையை கொண்டு அவர்களை பத்திரமாக மீட்டனர். 2 கி.மீ. தூரம் இழுத்து செல்லப்பட்ட படகும் மீட்கப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு 11 மணி வரை அரியலூர் கலெக்டர் வினய் மேற்பார்வையில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ஆற்றில் விழுந்த அனைவரும் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த சம்பவத்தில் நேற்று திடீர் திருப்பமாக நாயக்கர்பேட்டையை சேர்ந்த பழனிசாமி(வயது 55), கருப்பூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மனைவி ராணி(45), பட்டுக்குடியை சேர்ந்த சுயம்பிரகாசம்(50) ஆகிய 3 பேரை காணவில்லை என்றும், அவர்கள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதனால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், தமிழக விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, கலெக்டர்கள் வினய்(அரியலூர்), அண்ணாத்துரை(தஞ்சை), அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் ஆகியோர் மேற்பார்வையில் இரு மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புகுழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 5 குழுக்களாக பிரிந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இளைஞர்களும் ஆற்றில் இறங்கி தேடினர்.

காணாமல் போன 3 பேரில், ராணியின் உடல் தஞ்சை மாவட்டம் அணைக்கரை அருகே பிணமாக மீட்கப்பட்டது. மற்ற 2 பேரின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை?. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Next Story