10 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மனநலம் பாதிக்கப்பட்ட ஆசிரியர் குடும்பத்தினருடன் ஒப்படைப்பு ; பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்


10 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மனநலம் பாதிக்கப்பட்ட ஆசிரியர் குடும்பத்தினருடன் ஒப்படைப்பு ; பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 13 Sept 2019 4:45 AM IST (Updated: 13 Sept 2019 4:46 AM IST)
t-max-icont-min-icon

10 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மனநலம் பாதிக்கப்பட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர், குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டார்.

திருவண்ணாமலை,

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டம், நிமி கிராமத்தை சேர்ந்தவர் ஜானிஷா (வயது 42). இவர், அந்த பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஜானிஷாவிற்கு திடீரென மனநலம் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜானிஷா மருத்துவமனையில் இருந்து மாயமானார். இதனையடுத்து உறவினர்கள், அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இந்த நிலையில் எப்படியோ தமிழகம் வந்த அவர், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார்.

பின்னர் அவரை கடந்த மே மாதம் 2-ந் தேதி அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தின் பணியாளர்கள் மீட்டனர். அதைத் தொடர்ந்து அவர், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜானிஷாவிற்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையால் அவரது மனநலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு தனது முகவரி மற்றும் குடும்பத்தினரின் விவரம் குறித்து தெரிவித்தார்.

இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருவண்ணாமலைக்கு வந்த அவரது குடும்பத்தினரிடம் கலெக்டர் கந்தசாமி, ஜானிஷாவை ஒப்படைத்தார். பின்னர் அவர்கள், கலெக்டருக்கு நன்றியை தெரிவித்தனர். அப்போது அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தின் மனநல ஆலோசகர் டாக்டர் சுரேஷ்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதுபற்றி கலெக்டர் கந்தசாமி கூறியதாவது:-

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் கடந்த ஜனவரி மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் மனநலம் குன்றி சாலைகளில் அனாதையாக சுற்றித்திரிபவர்களை அழைத்து வந்து அவர்கள் குணம் அடையும் வரை சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்களின் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டு வருகிறது.

மீட்பு மையத்தின் மூலமாக இதுவரை 40 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டம் முழுவதும் மீட்கப்பட்டுள்ளனர். இதில் வெளி மாநிலத்தை சேர்ந்த சூரஜ் (உத்தரபிரதேசம்), ஜானிஷா (பீகார்), சங்கர்போ (மத்திய பிரதேசம்) ஆகிய 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதில், சூரஜ் மற்றும் ஜானிஷா அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தமிழகத்தில் திருவண்ணாமலை, திருச்சி, நாகை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். இந்த மையம் மூலம் இதுவரை 20 நபர்கள் தங்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். தற்போது 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story