கல்லணை கால்வாயில் நீர்வரத்து அதிகரிப்பு, கறம்பக்குடி பகுதியில் நாற்றுநடும் பணியில் விவசாயிகள் தீவிரம்


கல்லணை கால்வாயில் நீர்வரத்து அதிகரிப்பு, கறம்பக்குடி பகுதியில் நாற்றுநடும் பணியில் விவசாயிகள் தீவிரம்
x
தினத்தந்தி 13 Sept 2019 4:00 AM IST (Updated: 13 Sept 2019 4:46 AM IST)
t-max-icont-min-icon

கல்லணை கால்வாயில் நீர்வரத்து அதிகரித்து பாசன குளங்கள் நிரம்பி வருவதால் கறம்பக்குடி பகுதியில் சம்பா நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்த்து உள்ளனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா பகுதியில் 39 ஊராட்சிகள் உள்ளன. இதில் தஞ்சை மாவட்டத்தை ஒட்டியுள்ள ரெகுநாதபுரம், கிளாங்காடு, காட்டாத்தி, காமாம்பட்டி, செங்கமேடு, கலியராயன் விடுதி, புதுவிடுதி உள்பட 10 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகளாகும். கல்லணை கால்வாயில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரிலிருந்து இப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்த ஆண்டு மேட்டூர் அணையில், ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை நெல் சாகுபடி இப்பகுதியில் அதிகம் நடைபெற வில்லை. சென்ற ஆண்டை போல் இந்த ஆண்டும் ஆகஸ்டு மாதம் மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் கறம்பக்குடி பகுதி விவசாயிகள் சம்பா நடவு பணியில் ஆர்வம் காட்டினர். விவசாயிகள் எதிர்பார்த்ததை போல் மேட்டூர் அணையும் நிரம்பி கல்லணை கால்வாயில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதனால் பாசன குளங்களும் வேகமாக நிரம்பி வருவதால் நாற்று பறித்து நடவு செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், விளை வாய்க்கால்களில் தண்ணீர் முழுமையாக வந்து சேரவில்லை. இதனால் பாசன குளங்கள் நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், கல்லணை கால்வாயில் தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால் பாசன குளங்கள் நிரம்பி வருகின்றன. இதனால் தண்ணீர் பிரச்சினை இன்றி நல்ல விளைச்சல் இருக்கும் என எதிர்பார்த்து உள்ளோம். கடைமடை பகுதியில் உள்ள கிளை வாய்க்கால்களில் தண்ணீர் செல்வதையும் பாசன குளங்கள் நிரம்புவதையும் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என கூறினர். 

Next Story