மாவட்ட செய்திகள்

வேலூர் மத்திய சிறையில் முருகனை சந்திக்க நளினி அளித்த மனு நிராகரிப்பு + "||" + Nalini's plea to meet Murugan in Vellore Central Prison rejected

வேலூர் மத்திய சிறையில் முருகனை சந்திக்க நளினி அளித்த மனு நிராகரிப்பு

வேலூர் மத்திய சிறையில் முருகனை சந்திக்க நளினி அளித்த மனு நிராகரிப்பு
வேலூர் மத்திய சிறையில் இருக்கும் முருகனை சந்திக்க அனுமதிகோரி நளினி அளித்த மனுவை சிறைத்துறை நிராகரித்து உள்ளது.
வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனைபெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். கணவன்- மனைவி என்பதால் அவர்கள் இருவரும் 15 நாட்களுக்கு ஒருமுறை சனிக்கிழமை, பெண்கள் சிறையில் சந்தித்து பேச கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. அதன்பேரில் 15 நாட்களுக்கு ஒருமுறை முருகன் போலீஸ் பாதுகாப்புடன் பெண்கள் சிறைக்கு அழைத்துச்செல்லப்படுவார். அங்கு இருவரும் பேசியபின்னர் முருகன் மீண்டும் மத்தியசிறைக்கு அழைத்துசெல்லப்படுவார்.


இந்த நிலையில் நளினி தனது மகள் திருமண ஏற்பாட்டிற்காக பரோலில் வந்து, சத்துவாச்சாரியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார். அவர் மேலும் ஒருமாதம் பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அதன்பேரில் அவருக்கு மேலும் 3 வாரங்கள் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் மத்திய சிறையில் இருக்கும் முருகனை சந்தித்து பேச அனுமதி கேட்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு மனு அளித்திருந்தார். அந்த மனுவை சிறைத்துறை நிர்வாகம் நிராகரித்துள்ளது.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில் நளினி, முருகன் சந்திப்பு 15 நாட்களுக்கு ஒருமுறை கோர்ட்டு உத்தரவின்பேரில் நடந்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் முருகனை, நளினி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு நடந்து 14 நாட்கள்தான் ஆகிறது. 15 நாட்கள் ஆனால்தான் சந்திப்பதற்கு அனுமதிக்கப்படும்.

மேலும் தண்டனை கைதியை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே சந்திக்க முடியும். எனவே முருகனை சந்திக்க நளினி அளித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. நளினியின் பரோல் வருகிற 15-ந் தேதியுடன் முடிவதால் அன்று மாலைக்குள் அவர் சிறைக்கு வந்துவிடுவார். எனவே முருகன் விரும்பினால் அடுத்த வாரம் சனிக்கிழமை நளினியை சந்திக்கலாம் என்றனர்.