மாவட்ட செய்திகள்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு: பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது ஏறி - வாலிபர் தற்கொலை மிரட்டல் + "||" + At the Egmore Railway Station Getting on the Pandian Express Train Youth Suicide Threat

எழும்பூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு: பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது ஏறி - வாலிபர் தற்கொலை மிரட்டல்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பு: பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது ஏறி - வாலிபர் தற்கொலை மிரட்டல்
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது வாலிபர் ஒருவர் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு 9.40 மணிக்கு புறப்பட தயாரானது. அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வயிறு, கழுத்து பகுதிகளில் ரத்தம் வழிந்த நிலையில் ரெயிலின் மேற்கூரையில் ஏறி நின்று தன்னை கொலை செய்ய வருகிறார்கள் என்று கூச்சலிட்டு கொண்டிருந்தார்.


மேலும், ரெயிலின் மேற்கூரையின் மேல் சென்ற உயர்அழுத்த மின் கம்பியை தொடமுயன்றார். தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் மிரட்டல் விடுத்தார். இதைக்கண்ட எழும்பூர் ரெயில் நிலைய உதவி நிலைய அலுவலர் சந்திரசேகர் துரிதமாக செயல்பட்டு, உயர் அழுத்த கம்பின் மின் இணைப்பை துண்டித்தார். இதனால் அந்த வாலிபர் உயிர் சேதம் ஏற்படாமல் தப்பினார்.

இதையடுத்து ரெயில்வே போலீசார் அவரை சமாதானப்படுத்தி கீழே இறக்கினர். அப்போது அந்த வாலிபர் மதுபோதையில் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து ரெயில் நிலையத்திலேயே அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த எம்.பி.ஏ பட்டதாரியான கணேசன் (வயது 27) என்பது தெரியவந்தது. மேலும் அவர் தன்னை கொலைசெய்ய 50 பேர் விரட்டி வந்தனர் என மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசிக்கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கணேசனை போலீசார் மேல் சிகிச்சைக்காக, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயர் அழுத்த கம்பியின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட தயாரான ரெயில்கள் அனைத்தும், புறப்பட முடியாமல் நின்றது. பின்னர் 15 நிமிடங்களுக்கு பிறகு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு, பாண்டியன் எக்ஸ்பிரஸ் 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதன் பின் இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களும் தாமதமாகவே இயக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.