கட்-அவுட்டுக்கு ரத்தத்தால் அபிஷேகம் ரசிகர்கள் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட கூடாது நடிகர் சுதீப் கண்டிப்பு


கட்-அவுட்டுக்கு ரத்தத்தால் அபிஷேகம் ரசிகர்கள் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட கூடாது நடிகர் சுதீப் கண்டிப்பு
x
தினத்தந்தி 13 Sep 2019 10:00 PM GMT (Updated: 13 Sep 2019 6:21 PM GMT)

கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் ஆட்டை பலி கொடுத்து ரத்தத்தால் அபிஷேகம் செய்வது ஆரோக்கியமான விஷயம் அல்ல என்றும், இனிமேல் ரசிகர்கள் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் நடிகர் சுதீப் டுவிட்டர் மூலம் ரசிகர்களை கண்டித்துள்ளார்.

சிக்கமகளூரு, 

கட்-அவுட்டுக்கு ரசிகர்கள் ஆட்டை பலி கொடுத்து ரத்தத்தால் அபிஷேகம் செய்வது ஆரோக்கியமான விஷயம் அல்ல என்றும், இனிமேல் ரசிகர்கள் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் நடிகர் சுதீப் டுவிட்டர் மூலம் ரசிகர்களை கண்டித்துள்ளார்.

பைல்வான் திரைப்படம்

பிரபல கன்னட நடிகர் சுதீப் நடித்த ‘பைல்வான்‘ திரைப்படம் நேற்று கர்நாடகம் உள்பட இந்தியா முழுவதும் வெளியாகியது. இதேபோல் தாவணகெரே மாவட்டத்திலும் ‘பைல்வான்‘ திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடுகிறது. இந்த நிலையில் தாவணகெரேவில் நடிகர் சுதீப்பின் ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு திரண்டு கட்-அவுட்டுகள், பேனர்கள் வைத்தும், பட்டாசுகள் வெடித்தும், கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்தும் ஆரவாரம் செய்தனர். இதேபோல் தாவணகெரே மாவட்டம் ஜகலூர் அருகே மலேபோரடனஹட்டி கிராமத்தில் உள்ள ஒரு திரையரங்கிலும் ‘பைல்வான்‘ திரைப்படம் வெளியாகியது. அப்போது நடிகர் சுதீப்புக்கு ரசிகர்கள் கட்-அவுட்டுகள் வைத்தனர். பின்னர் அவர்கள் அந்த கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்தனர். அதையடுத்து அவர்கள் ஒரு ஆட்டை பலி கொடுத்து கட்-அவுட்டுகளுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்தனர். இது அங்கிருந்த அனைவருக்கும் பீதியை ஏற்படுத்தியது.

நடிகர் சுதீப்

இதை உடனடியாக திரையரங்கு உரிமையாளர்கள் கண்டித்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி நடிகர் சுதீப்பின் மேலாளரை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். அவர் இச்சம்பவம் குறித்து நடிகர் சுதீப்புக்கு தெரியப்படுத்தினார். அதன்பேரில் உடனடியாக நடிகர் சுதீப் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டார்.

அதில், “ரசிகர்கள் என் மீது கொண்ட அன்புக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு என்றுமே நான் கடமைப்பட்டு இருக்கிறேன். அவர்களால்தான் நான் வாழ்கிறேன். இருப்பினும் ரசிகர்கள் என்னுடைய கட்-அவுட்டுகளுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்வது ஆரோக்கியமான விஷயம் அல்ல. இனிமேல் ரசிகர்கள் யாரும் இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம். ரசிகர்கள் எப்போதும் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்“ என்று நடிகர் சுதீப் பதிவிட்டு இருந்தார்.

Next Story