குடிநீர் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்


குடிநீர் வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
x
தினத்தந்தி 13 Sep 2019 10:15 PM GMT (Updated: 13 Sep 2019 7:06 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே முறையாக குடிநீர் வழங்கிடகோரி கிராம பெண்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்து உள்ள செதில்பாக்கம் மேட்டு காலனியில் சுமார் 40 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய் உடைந்ததால் கடந்த 6 நாட்களாக இப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் ஏற்கனவே கடந்த மாதத்தில் மட்டும் 3 முறை குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சுமார் 9 நாட்கள் குடிநீர் இன்றி இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. செதில்பாக்கம் பகுதியில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு உள்ள 8 ஆழ்துளை கிணறுகள் இருந்தாலும் தற்போது 4 மட்டுமே செயல்பட்டு வருவதாகவும், பழுதடைந்த மின்மோட்டார்களை சீரமைத்து தண்ணீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி செதில்பாக்கம் மேட்டுக்காலணியைச் சேர்ந்த பெண்கள் 50 பேர் நேற்று கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமி நாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடிநீர் பிரச்சினையை போக்க தக்க நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். அதன்பேரில், முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story