விளைநிலங்களுக்குள் கழிவுநீர் புகுவதாக கூறி,குப்பை லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்


விளைநிலங்களுக்குள் கழிவுநீர் புகுவதாக கூறி,குப்பை லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Sept 2019 4:15 AM IST (Updated: 14 Sept 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

விளைநிலங்களுக்குள் கழிவுநீர் புகுவதாக கூறி குப்பை லாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஊட்டிக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஊட்டி நகராட்சி மார்க்கெட், உழவர் சந்தை, வீடுகள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் என தினமும் 30 டன்னுக்கு மேல் குப்பைகள் சேகரமாகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், நகராட்சி வாகனங்களில் துப்புரவு பணியாளர்கள் வார்டு, வார்டாக சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு தீட்டுக்கல் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது.

அங்கு குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டாலும், அதனை மக்க செய்வதில் சிக்கல் உள்ளது. இதற்கு காரணம் ஊட்டியில் நிலவும் சீதோ‌‌ஷ்ண காலநிலையே ஆகும். இதனால் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. சில நேரங்களில் குப்பைகளுக்கு தீ வைப்பதால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. அதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. தீட்டுக்கல்லில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் 5 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு சொந்தமானது என்பதால், அதற்கு பதிலாக புதுமந்து பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான வனப்பகுதியை வனத்துறைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையே தீட்டுக்கல் பகுதியில் குப்பைகளை கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தமிழ்நாடு பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பாக பசுமை தீர்ப்பாய உறுப்பினர் மற்றும் சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி ஜோதிமணி தீட்டுக்கல் குப்பை கிடங்கு மற்றும் காந்தல் முக்கோணத்தில் உள்ள நுண்உரம் செயலாக்கம் மையத்தை பார்வையிட்டு சென்றார். இந்த நிலையில் ஊட்டியில் சேகரிக்கப்பட்டு லாரிகளில் கொண்டு செல்லப்படும் குப்பைகள் தீட்டுக்கல்லில் விளைநிலங்களை ஒட்டி கொட்டுவதாகவும், மழை நேரங்களில் குப்பை கழிவுநீர் விளைநிலங்களுக்குள் புகுவதால் பயிர்கள் அழுகுவதாகவும் கூறி அப்பகுதி விவசாயிகள் நேற்று குப்பைகள் கொண்டு சென்ற நகராட்சி லாரிகளை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளில் இருந்து நிலத்துக்குள் ஊடுருவி தங்களது நிலத்துக்குள் புகுந்த கழிவுநீரை ஒரு பாட்டிலை கையில் எடுத்து வந்தனர். ஊட்டி நகரில் பல்வேறு இடங்களில் சேகரித்து கொண்டு செல்லப்பட்ட லாரிகள் ஒவ்வொன்றாக என 6 லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டன. இதனால் பார்சன்ஸ்வேலியில் இருந்து ஊட்டிக்கு வரும் அரசு பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி நகராட்சி பொறியாளர் ரவி, சுகாதார அதிகாரி டாக்டர் முரளி சங்கர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, குப்பை கிடங்கை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட உள்ளதாகவும், சுற்றுச்சுழல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். அதன் பின்னர் அங்கிருந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். 

Next Story