மாவட்ட செய்திகள்

மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில், பஸ் நிலையத்தில் மாமனாரை குத்திக்கொன்ற டிரைவர் + "||" + Father-in-law at the bus station Driver stabbed and killed

மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில், பஸ் நிலையத்தில் மாமனாரை குத்திக்கொன்ற டிரைவர்

மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில், பஸ் நிலையத்தில் மாமனாரை குத்திக்கொன்ற டிரைவர்
மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் மேலூர் பஸ் நிலையத்தில் மாமனாரை டிரைவர் குத்திக்கொன்றார். ரத்தம் சொட்டிய கத்தியுடன் நின்ற அவரை துணிச்சலாக பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மதுரை,

மதுரை மாவட்டம், மேலூர் அருகே நத்தம் ரோட்டில் உள்ள ஆலம்பட்டியை சேர்ந்தவர் நல்லமணி (வயது 45). டிரைவர். அவருடைய மனைவி தனம் (35). இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு தென்னரசு (10) என்ற மகனும், மகாலட்சுமி (5) என்ற மகளும் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்த நல்லமணி கடந்த ஒரு ஆண்டாக கோவையில் தங்கி இருந்து டிரைவராக வேலை பார்த்தார். தனம் தனது 2 குழந்தைகளுடன் அதே ஊரில் உள்ள தனது தந்தை தங்கையாவின் வீட்டில் வசித்து வருகிறார். குடும்ப தகராறில் தங்கையாவின் மீது அவருடைய மருமகன் நல்லமணிக்கு முன்விரோதம் இருந்தது.

இதற்கிடையே மேலூர் கோர்ட்டில் நடைபெற்று வரும் சொத்து வழக்கு தொடர்பாக ஆஜராக தங்கையா நேற்று வந்தார். இதனை எப்படியோ அறிந்த நல்லமணியும் மேலூர் வந்தார். அவர் தங்கையாவை எதிர்பார்த்து மேலூர் பஸ் நிலையத்தில் காத்திருந்தார். முதுகில் ஒரு பேக்கையும் மாட்டி இருந்தார்.

பஸ் நிலையம் அருகில் தங்கையா நடந்து வந்ததை கவனித்தார். அப்போது அவரை நல்லமணி கத்தியுடன் வழிமறித்தார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தங்கையா அங்கிருந்து தப்பி ஓட முயற்சிப்பதற்குள், அவரை சராமாரியாக நல்லமணி கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் தங்கையா சுருண்டு கீழே விழுந்து சற்று நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொடூர கொலையை பார்த்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். சிதறி ஓடினார்கள். தங்கையா உடல் அருகே யாரும் வந்துவிடாதபடி ரத்தம் சொட்டிய கத்தியுடன் நல்லமணி நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு நின்றிருந்த பொதுமக்களில் சிலர் துணிச்சலாக நல்லமணியின் பின்பக்கமாக வந்து, கத்தியை தட்டிவிட்டனர். பின்னர் அவரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர்.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு மேலூர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்களிடம் நல்லமணி பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மேலும் தங்கையாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், “தன்னுடைய மனைவி பிரிந்திருக்க மாமனார் தங்கையாதான் காரணம் என நல்லமணி நினைத்துள்ளார். மேலும் நல்லமணி மீது போலீசில் ஏற்கனவே புகாரும் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில்தான் மாமனாரை நல்லமணி கொலை செய்திருக்கலாம்” என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.