காவிரிப்படுகையில் மரக்கன்றுகள் நடுவது குறித்து ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு


காவிரிப்படுகையில் மரக்கன்றுகள் நடுவது குறித்து ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 14 Sept 2019 3:15 AM IST (Updated: 14 Sept 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

காவிரிப்படுகையில் மரக்கன்றுகள் நடுவது குறித்து கரூரில் ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கரூர்,

காவிரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காக ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ஈ‌ஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தொடங்கி உள்ளார். இந்த இயக்கத்தில் தமிழக, கர்நாடக மாநில அரசுகள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக தலைக்காவிரியான கர்நாடக மாநிலம் குடகு மலை முதல் திருவாரூர் வரை மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக பயணம் மேற்கொண்டு உள்ளார்.

அதன்படி கடந்த 3-ந்தேதி தலைக்காவிரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் காவிரி கூக்குரல் இயக்க பயணம் புறப்பட்ட அவர் மடிகேரி, மைசூரு, மாண்டியா, பெங்களூரு வழியாக தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான ஓசூர் அத்திப்பள்ளிக்கு வந்தார். இந்தநிலையில் நேற்று காலை ஈரோட்டில் இருந்து கரூருக்கு ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக வந்தார். இதையடுத்து கரூர் ஈசா யோகா மைய தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

அங்கு நடந்த நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் பேசுகையில், காவிரி படுகை பகுதிகளில் 242 கோடி வரை மரக்கன்றுகள் நடப்படுகிறபோது, 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த காவிரி நதியை மீட்டெடுக்க முடியும். இதன் மூலம் மக்களின் நீர்த்தேவை பூர்த்தியாவதோடு, இயற்கையான சூழலும் நிலவும். மக்களும் தாமாக முன்வந்து மரக்கன்றுகளை நட வேண்டும்.

விவசாயிகள் பழவகை, மருத்துவ குணம் கொண்ட மரங்களை சாகுபடி செய்ய முன்வர வேண்டும். இதன் மூலம் அவர்கள் லாபம் அடைவதோடு, சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கும் உதவிகரமாக இருக்கும். கரூர் சார்பில் 1 கோடி மரக்கன்றுகள் நட ஏற்பாடு நடப்பது வரவேற்கதக்கதாகும் என்றார். அதனை தொடர்ந்து மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது ஆகும். அதனை தொடர்ந்து குளித்தலையை நோக்கி விழிப்புணர்வு ஊர்வலம் புறப்பட்டு சென்றது.

இதையடுத்து குளித்தலையில் இருந்து ஊர்வலமாக லாலாபேட்டையை அடுத்த மகாதானபுரத்திற்கு வந்த ஜக்கி வாசுதேவ்வுக்கு மகாதானபுரம் காவிரி நீர்ப்பாசன நலசங்கத் தலைவர் ராஜாராம் மற்றும் பொதுமக்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். பின்னர் அந்த ஊர்வலம் திருச்சி நோக்கி புறப்பட்டு சென்றது.

Next Story