மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு + "||" + Okanakkal water supply decreased and also Mettur Dam

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்தது மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேலும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம்,

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து விட்டதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்தது.


நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை முதல் படிப்படியாக குறையத்தொடங்கியது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்தபோதிலும் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்ததன் காரணமாக அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை வினாடிக்கு 25 ஆயிரத்து 900 கனஅடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் இரவு 8 மணிக்கு 23 ஆயிரத்து 900 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் காலை அணைக்கு வினாடிக்கு 59 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை நீர்வரத்து வினாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 120.63 அடியாக இருந்தது. நேற்று காலை 120.26 அடியாக குறைந்தது.

இந்தநிலையில் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடிக்கு கீழ் குறைந்துள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது இன்று (சனிக்கிழமை) நிறுத்தப்படும் என தெரிகிறது.