மணப்பாறை நகராட்சி பகுதியில் கலங்கலாக வரும் காவிரி குடிநீர் - பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி
மணப்பாறை நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் கலங்கலாக வருவதால் அதை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
மணப்பாறை,
மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் பல்வேறு இடங்களில் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்ட நிலையில், காவிரி குடிநீரை மட்டும் தான் மக்கள் தங்களின் குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த காவிரி குடிநீரும் மணப்பாறை பகுதியில் முறையாக வினியோகம் செய்யப்படுவதில்லை.
வாரத்தில் 2 நாட்கள் வினியோகம் செய்யப்பட்டு வந்த காவிரி குடிநீர் தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறை தான் வினியோகிக்கப்படுகிறது. இதனால் மணப்பாறை நகராட்சி பகுதிகளில் மக்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் காசு கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டிய நிர்பந்தத்திற்கும் ஆளாகி உள்ளனர்.
இந்தநிலையில் இந்த குடிநீரும் தற்போது கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் கலங்கலாக வருகின்றது. இதனால் அந்த குடிநீரை மக்கள் பயன்படுத்தவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி காவிரி குடிநீரால் தான் தொற்று நோய்களும் ஏற்படும் என்ற நிலையும் உருவாகி உள்ளது. சமீபத்தில் தான் மணப்பாறை பகுதியில் காவிரி குடிநீரில் கழிவு நீர் ஏதும் கலக்கின்றதா என்பதை அறிய நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான ஆய்வு பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிலையில் மீண்டும் காவிரி நீருடன் கழிவு நீர் கலந்து வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
மணப்பாறை நகராட்சிப் பகுதியைப் பொறுத்தவரை மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் வெறும் கோரிக்கைகளாகவே இருந்து விடுகின்றது. இதனால் தான் தற்போது மக்கள் குடிக்க கூட தண்ணீர் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஆகவே இதுசம்பந்தமாக நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் மாவட்ட கலெக்டர் விரைந்து தலையிட்டு விரிவான விசாரணை மற்றும் ஆய்வு நடத்தி மக்களுக்கான குடிநீர் சுகாதாரமாகவும் தடையின்றியும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story