மாவட்டத்தில் ரூ.6 கோடியில் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம் - கலெக்டர் எஸ்.சிவராசு தகவல்
திருச்சி மாவட்டத்தில் ரூ.6 கோடி செலவில் அம்மா பூங்கா, உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.
திருச்சி,
கிராமங்களில் உள்ள இளைஞர்களின் திறன்களை பயனுள்ளதாகவும், உடல் நலத்தையும், மன நலத்தையும் பாதுகாப்பதன் மூலமும் ஒவ்வொருவரும் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும். இதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தமிழக சட்டமன்றத்தில் கடந்த 29.6.2016 அன்று 110 விதியின் கீழ் ‘கிராம ஊராட்சிகளில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியோர்களுக்கு பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள், நடைபாதைகள், சிமெண்டு இருக்கைகள், குடிநீர் வசதிகள், புல்தரை, பசுமைத்தோட்டம் மற்றும் கழிப்பறை ஆகிய அம்சங்களுடன் கூடிய 500 அம்மா பூங்காக்கள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்’ என்று முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் 11 கிராம ஊராட்சிகளில் குழந்தைகள், பெண்கள் மற்றும் பெரியோர்களுக்கு பொழுதுபோக்கு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி சாதனங்கள், நடைபாதைகள், சிமெண்டு இருக்கைகள், குடிநீர் வசதிகள், புல்தரை, பசுமைத்தோட்டம் மற்றும் கழிப்பறை ஆகிய அம்சங்களுடன் கூடிய 20 அம்மா பூங்காக்கள் தலா ரூ.20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோல கிராம ஊராட்சிகளில் ஊரக பகுதி இளைஞர்களுக்கு உடல்திறன் மற்றும் மனவளத்தினை மேம்படுத்த ஊரக பகுதிகளில் 20 அம்மா உடற்பயிற்சி கூடங்கள் தலா ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் அம்மா பூங்காவுடன் இணைந்த உடற்பயிற்சிக்கூடம் 15 ஆயிரம் சதுர அடி முதல் 20 ஆயிரம் சதுர அடி வரை உள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் திருச்சி மாவட்டத்தில் ரூ.6 கோடி செலவில் அம்மா பூங்காக்கள் மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story