வேப்பூர் அருகே, கோவில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் நகை பறிப்பு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


வேப்பூர் அருகே, கோவில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் நகை பறிப்பு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 13 Sep 2019 10:45 PM GMT (Updated: 13 Sep 2019 8:54 PM GMT)

வேப்பூர் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேப்பூர், 

வேப்பூர் அருகே உள்ள தே.புடையூர் கிராமத்தில் பிரசித்திபெற்ற பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சீரமைக்கப்பட்டு நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் வேப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் பெரும்பலூர் கிராமத்தை சேர்ந்த அஞ்சலை (வயது 60) என்பவரும் சாமி தரிசனம் செய்ய வந்தார்.

அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். இருப்பினும் நகை கிடைக்கவில்லை. கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் அஞ்சலை கழுத்தில் கிடந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து சென்றிருப்பது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து அவர் வேப்பூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story