கார் கவிழ்ந்து தாய்-மகன் பலி


கார் கவிழ்ந்து தாய்-மகன் பலி
x
தினத்தந்தி 14 Sept 2019 4:30 AM IST (Updated: 14 Sept 2019 3:49 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே கார் கவிழ்ந்து தாய்-மகன் உயிரிழந்தனர்.

இளையான்குடி,

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சோதுகுடி கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார். விவசாயி. இவரது மனைவி கலையரசி (வயது 45). இவர்களது மகன் காளஸ்வரன் (26). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் சூராணம் அருகில் உள்ள சாலியன்திடல் கிராமத்தில் நடந்த உறவினரின் வீட்டுக்கு நிகழ்ச்சிக்கு ராம்குமார் குடும்பத்துடன் காரில் சென்றார். உறவினருக்கு சொந்தமான இந்த காரை காளஸ்வரன் ஓட்டி சென்றார். நிகழ்ச்சி முடிந்ததும் தாயும், மகனும் மட்டும் காரில் வீட்டிற்கு திரும்பினர்.

கீழசேத்தூர் கிராமத்தின் அருகே வந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்தது. அதில் சம்பவ இடத்திலேயே காளஸ்வரன், கலையரசி ஆகியோர் பலியானார்கள். ராம்குமார் உறவினர் வீட்டிலேயே தங்கியதால் விபத்தில் இருந்து தப்பினார். இதுகுறித்து இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தாயும்-மகனும் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story