வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் பணியை தூய்மை இந்தியா திட்ட இயக்குனர் ஆய்வு


வீடு, வீடாக குப்பை சேகரிக்கும் பணியை தூய்மை இந்தியா திட்ட இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 13 Sep 2019 9:30 PM GMT (Updated: 13 Sep 2019 10:21 PM GMT)

திருச்சியில் வீடு, வீடாக குப்பை சேகரிக்கப்படுவதை மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்ட இயக்குனரும் இணைச்செயலாளருமான வி.கே.ஜிண்டால் திருச்சியில் நேற்று ஆய்வு நடத்தினார். ஏழைகளுக்கான ‘அட்சயபாத்திரம்’ மையத்தையும் அவர் திறந்து வைத்தார்.

திருச்சி, 

திருச்சி மாநகராட்சி கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை நகர பட்டியலில் முதலிடத்தையும், கடந்த ஆண்டு இந்திய அளவில் 13-வது இடத்தையும் பெற்றுள்ளது. மேலும் குடிநீர் பிரச்சினை இல்லாத நகரம் மற்றும் சாலையோரம் குப்பை தொட்டிகள் வைப்பது அறவே இல்லாத நகரம் என்ற பெருமையையும் பெற்றது. அத்துடன் திருச்சி மாநகரில்தான் பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா திட்டத்தில் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் மற்றும் தூய்மை பணிக்காக எடுத்துக்கொண்ட முயற்சிகள் பற்றி ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்ட இயக்குனரும், அரசின் இணை செயலாளருமான வி.கே.ஜிண்டால் நேற்று காலை திருச்சி வந்தார்.

அவர் ஸ்ரீரங்கம், பொன்மலை, அரியமங்கலம், கோ-அபிஷேகபுரம் ஆகிய கோட்டங்களில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்ட இடங்களான காவிரி கரையோரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட இடங்களில் திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், நகர பொறியாளர் அமுதவள்ளி மற்றும் அதிகாரிகளுடன் ஜி.கே.ஜிண்டால் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி மாநகரில் வீடு, வீடாக சிறிய வாகனங்களில் சென்று மாநகராட்சி பணியாளர்கள் எப்படி குப்பை சேகரிக்கிறார்கள்? என்றும், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை எப்படி தரம் பிரித்து தனித்தனியாக சேகரிப்பதையும் பார்வையிட்ட அவர், பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சிறிய குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்படுவதையும் ஆய்வு செய்தார்.

திருச்சி உறையூர் பணிக்கன் தெருவில் உள்ள மாநகராட்சி இயற்கை உரம் தயாரிக்கும் நுண்ணுயிர் செயலாக்க மையத்தை ஆய்வு செய்தார். அங்கு பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிப்பதை பார்வையிட்டார். தொடர்ந்து உறையூர் சமுதாய சமையற்கூடத்தையும், திருச்சி கண்டோன்மெண்டில் இயங்கும் மண்புழு உரம் சேகரிக்கும் அமைப்பையும் பார்வையிட்டார். பின்னர் பொன்மலை கோட்டத்திற்கு உட்பட்ட டி.வி.எஸ். நகரில் வீடு, வீடாக பணியாளர்கள் குப்பை சேகரிக்கும் பணியை பார்வையிட்ட அவர், மாநகராட்சியின் நிர்வாக பணியை பாராட்டினார்.

திருச்சி கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் அருகில் ‘அன்புச்சுவர்’ என்ற பெயரில் பழைய துணிகளை சேகரிக்கும் மையம் செயல்படுகிறது. அங்கு பொதுமக்கள் நல்ல நிலையில் உள்ள பழைய துணிகளை ஒப்படைக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்படும் துணிகளை, ஏழை-எளியவர்கள் இலவசமாக தங்களுக்கு தேவையானவற்றை எடுத்து செல்லலாம். தற்போது அதன் அருகில், ஏழை-எளியவர்களை பசியாற்றும் வகையில் ரூ.10 லட்சம் செலவில் ‘அட்சயபாத்திரம்’ என்ற பெயரில் குளிரூட்டப்பட்ட மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதை, வி.கே.ஜிண்டால் திறந்து வைத்தார். பொதுமக்கள் தேவைக்கு அதிகமான ஸ்நாக்ஸ், பிஸ்கட் மற்றும் கெட்டுப்போகாத உணவு போன்றவற்றை தூக்கி வீசிவதை தவிர்த்து, அட்சயபாத்திரம் மையத்தில் ஒப்படைக்கலாம். அங்கு பாதுகாக்கப்பட்டு ஏழைகள் பசியாற இலவசமாக வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

Next Story