மாவட்ட செய்திகள்

ஜீவசமாதி அடைய முயற்சி: சிவகங்கை கலெக்டரை விடிய, விடிய காக்க வைத்த சாமியார் + "||" + Trying to achieve life: Sivagangai Collector Dawn, the dawn defending Samyar

ஜீவசமாதி அடைய முயற்சி: சிவகங்கை கலெக்டரை விடிய, விடிய காக்க வைத்த சாமியார்

ஜீவசமாதி அடைய முயற்சி: சிவகங்கை கலெக்டரை விடிய, விடிய காக்க வைத்த சாமியார்
சிவகங்கை அருகே ஜீவசமாதி அடையப் போவதாக கூறிய சாமியார், விடிய-விடிய கலெக்டரை காக்க வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதிகாலையில் தனது முடிவை அவர் கைவிட்டு வீடு திரும்பியதால் பரபரப்பு அடங்கியது.
சிவகங்கை, 

சிவகங்கையை அடுத்த பாசாங்கரையை சேர்ந்தவர் இருளப்பசாமி (வயது 77). இவருக்கு இருளாயி என்ற மனைவியும், கண்ணாயிரம் என்ற மகனும், பூச்சி என்ற மகளும் உள்ளனர். இவர் பாசாங்கரையில் ஜீவசமாதி அடையப் போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதன்படி நேற்று முன்தினம் ஜீவசமாதி அடைய இருப்பதாக கூறி பொதுமக்கள் மத்தியில் அமர்ந்தார். அந்த இடத்தில் குழி தோண்டப்பட்டதோடு இறுதி சடங்குக்கான ஏற்பாடுகளும் நடந்தன.

நள்ளிரவு 12 மணியில் இருந்து நேற்று அதிகாலை 5 மணிக்குள் சிவலிங்கத்தை கட்டிபிடித்தபடி இருப்பேன், அப்போது தனது உயிர் பிரிந்துவிடும் என்றும், பின்பு என் உடலை ஏற்கனவே தேர்வு செய்து குழி தோண்டிய இடத்தில் வைக்கும்படியும் அவர் தெரிவித்தார். அந்த குழியில் கொட்டுவதற்காக விபூதி, பூக்கள் போன்றவையும் வாங்கி தயார் நிலையில் வைத்திருந்தனர். மேலும் அவரை காண வந்த ஏராளமானோருக்கு உணவு தயாரித்தும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இருளப்பசாமியின் உடல் நிலையை கண்காணிக்க இடையமேலூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அருண்குமார் தலைமையில் மருத்துவ குழுவினரும் வந்தனர். அவர்கள் இரவு 10 மணி முதல் இருளப்பசாமி இருந்த இடத்தின் அருகிலேயே இருந்து ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை இருளப்பசாமியின் இதயதுடிப்பு, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு ஆகியவற்றை கண்காணித்தனர்.

இந்த நிலையில் நள்ளிரவில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேசுவரன், தாலுகா இன்ஸ்பெக்டர் சீராளன் ஆகியோர் வந்து இருளப்பசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் இருளப்பசாமி தனது முடிவை மாற்றிக்கொள்ளாததால் விடிய, விடிய அங்கேயே இருந்தனர்.

இதற்கிடையே உணவு ஏதும் சாப்பிடாததால் இருளப்பசாமி சோர்வடைந்தார். ஒரு கட்டத்தில் இருளப்பசாமி திடீரென எழுந்து நின்று பொதுமக்களுக்கு ஆசி வழங்கி பேசினார். அவருக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இரவு 3.30 மணியளவில் இருளப்பசாமி திடீரென்று எழுந்து தன்னுடைய உடலை அடக்கம் செய்ய தோண்டப்பட்ட இடம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று வந்தார்.

இருளப்பசாமி ஜீவசமாதி அடைவதாக கூறிய நேரம் நெருங்கிய நிலையில் கூட்டமும் பல மடங்கு அதிகரித்தது. மேலும் சில சாமியார்கள் வந்து தேவாரம், திருவாசகம் உள்பட பக்தி பாடல்களை பாடிக் கொண்டிருந்தனர்.

அதிகாலை 5 மணியளவில் இருளப்பசாமியை பரிசோதித்த டாக்டர்கள் குழுஅவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் இருளப்பசாமி ஜீவசமாதி அடையும் முடிவை கைவிட்டதாக திடீரென ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இருளப்பசாமி அந்த இடத்திலேயே சிறிது நேரம் தரையில் படுத்து கிடந்தார். பின்னர் அவர் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதால் அதன் பின்பு பரபரப்பு முடிவுக்கு வந்தது.

இருளப்பசாமியின் மனைவி இருளாயி, மகன் கண்ணாயிரம் ஆகியோர் கலெக்டரிடம் கூறுகையில், ஜீவசமாதி அடையும் நிகழ்ச்சியை அறிவிக்க வேண்டாம் என்று கூறியதாகவும், ஆனால் இருளப்பசாமி கேட்கவில்லை, என்றும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி கலெக்டர் ஜெயகாந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

உயிருடன் ஜீவசமாதி அடைவதும் அல்லது இயற்கைக்கு மாறாக மரணத்தை ஏற்படுத்திக் கொள்வதும் சட்டப்படி குற்றமாகும். இதனால் நான் ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இருளப்பசாமியின் வீட்டிற்கே சென்று, அவரிடம் இந்த தகவலை எடுத்து கூறினேன். ஆனால் அவர் அதை கேட்காமல் ஜீவசமாதிக்கு முயற்சித்ததால் இரவு முழுவதும் அவருடைய அருகில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும் போலீசார் மற்றும் வருவாய்துறையினருடன் இணைந்து விடிய, விடிய கண்காணித்தோம். அதன் பின்னரே அவர் தனது முடிவை கைவிட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் இருளப்பசாமியின் ஜீவசமாதிக்காக தோண்டிய குழியை சிவகங்கை தாசில்தார் கண்ணனை அழைத்து மூட நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் கேட்டுக்கொண்டார். பின்னர் அந்த குழி மூடப்படுவதை பார்வையிட்டு, அந்த பணியும் முடிவடைந்த பின்னரே கலெக்டர் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. சாமியார் ஜக்கி வாசுதேவை சந்தித்த திரிஷா
நடிகை திரிஷா சமூக, ஆன்மிக விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார். யுனிசெப் அமைப்பில் நல்லெண்ண தூதராக இருந்து பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு குரல் கொடுக்கிறார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை