மத்திய, மேற்கு ரெயில்வேயின் 29 ரெயில் நிலையங்களில் இலவச வை-பை வசதி ரெயில்வே மந்திரி தொடங்கி வைத்தார்


மத்திய, மேற்கு ரெயில்வேயின் 29 ரெயில் நிலையங்களில் இலவச வை-பை வசதி ரெயில்வே மந்திரி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Sept 2019 4:30 AM IST (Updated: 14 Sept 2019 4:08 AM IST)
t-max-icont-min-icon

மத்திய, மேற்கு ரெயில்வேயின் 29 ரெயில் நிலையங்களில் இலவச வை-பை வசதியை ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தொடங்கி வைத்தார்.

மும்பை, 

மத்திய, மேற்கு ரெயில்வேயின் 29 ரெயில் நிலையங்களில் இலவச வை-பை வசதியை ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தொடங்கி வைத்தார்.

கூடுதல் ரெயில் சேவை

மத்திய ரெயில்வே சார்பில் சி.எஸ்.எம்.டி. - நிஜாமுதின் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் கூடுதல் சேவை தொடக்க விழா நேற்று சி.எஸ்.எம்.டி.யில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் கூடுதல் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில்சேவையை தொடங்கி வைத்தார்.

இந்த ரெயில் (வண்டி எண்:22221) வருகிற 16-ந் தேதி முதல் திங்கள், புதன், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் சி.எஸ்.எம்.டி.யில் இருந்து புறப்பட்டு டெல்லி செல்லும். இதே ரெயில் (வண்டி எண்:22222) இன்று (சனிக்கிழமை) முதல் செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய கிழமைகளில் டெல்லியில் இருந்து புறப்பட்டு சி.எஸ்.எம்.டி. வந்து சேரும்.

4,574 ரெயில்நிலையங்களில்...

கூடுதல் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தவிர மத்திய, மேற்கு ரெயில்வே வழித்தடங்களில் பல்வேறு பயணிகள் வசதி திட்டங்களை ரெயில்வே மந்திரி தொடங்கி வைத்தார். இதில் கார் ரோடு, வில்லே பார்லே உள்ளிட்ட பல்வேறு ரெயில்நிலையங்களில் கட்டப்பட்ட 11 நடைமேம்பாலங்கள், பரேல் ரெயில்நிலையத்தில் நகரும் படிகட்டு, லிப்டு ஆகியவற்றையும், கோவண்டி மற்றும் காட்கோபர் ரெயில்நிலையத்தில் புதுப்பிக்கப்பட்ட டிக்கெட் முன்பதிவு மையத்தையும், 29 ரெயில் நிலையங்களில் இலவச வை-பை வசதியையும் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து பேசிய ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல், ‘‘நாடு முழுவதும் 4 ஆயிரத்து 574 ரெயில்நிலையங்களில் இலவச வை-பை வசதி தொடங்கப்பட்டுள்ளது’’ என கூறினார். மேலும் அவர், மெட்ரோ ரெயில்நிலையங்கள் அருகில் உள்ள அந்தேரி, காட்கோபர் ரெயில்நிலையங்களில் பயணிகளுக்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

விழாவில் மாநில மந்திரி வினோத் தாவ்டே, மனோஜ் கோடக் எம்.பி., ஹூசேன் தால்வி எம்.பி., மத்திய, மேற்கு ரெயில்வே பொது மேலாளர் ஏ.கே. குப்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story