இந்திய திரைப்பட விழா: பரியேறும் பெருமாள் படத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது - அமைச்சர் கந்தசாமி வழங்கினார்
புதுச்சேரியில் இந்திய திரைப்பட விழா நேற்று தொடங்கியது. விழாவில் பரியேறும் பெருமாள் படத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதை அமைச்சர் கந்தசாமி வழங்கினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்பட கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் அமைப்பு ஆகியவை இணைந்து இந்திய திரைப்பட விழா-2019 நடத்துகின்றன. அதன் தொடக்க விழா புதுவை முருகா தியேட்டரில் நேற்று மாலை நடந்தது. அமைச்சர் கந்தசாமி விழாவில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
இதில் சிறந்த திரைப்படமாக பரியேறும் பெருமாள் படம் தேர்வு செய்யப்பட்டது. அந்த படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜுக்கு, சங்கரதாஸ் சுவாமிகள் விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பரியேறும் பெருமாள் திரைப்படம் திரையிடப்பட்டது.
முன்னதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் வினயராஜ் வரவேற்றார். விழாவில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., நவதர்ஷன் திரைப்பட கழக செயலர் பழனி, அலையன்ஸ் பிரான்சேஸ் அமைப்பின் தலைவர் சதீஷ் நல்லாம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
விழாவையொட்டி இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நகர்கீர்த்தன் (வங்காள மொழி) திரைப்படமும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) சூடானி ப்ரம் நைஜீரியா (மலையாள) திரைப்படமும், 16-ந் தேதி மகாநதி (தெலுங்கு) திரைப்படமும், 17-ந் தேதி ராஜி (இந்தி) திரைப்படமும் திரையிடப்படுகின்றன. இந்த படங்களை இலவசமாக கண்டுகளிக்கலாம்.
Related Tags :
Next Story