தேசிய கல்வி கொள்கை மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கச் செய்யும் - மதுரையில் தொல்.திருமாவளவன் பேட்டி


தேசிய கல்வி கொள்கை மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கச் செய்யும் - மதுரையில் தொல்.திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 15 Sept 2019 3:45 AM IST (Updated: 15 Sept 2019 12:41 AM IST)
t-max-icont-min-icon

“தேசிய கல்வி கொள்கை மாணவர்களின் இடைநிற்றல் சதவீதத்தை அதிகரிக்கச் செய்யும்” என மதுரையில் அளித்த பேட்டியில் தொல்.திருமாவளவன் கூறினார்.

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிளக்ஸ் பேனர்கள் வைக்கும் விவகாரங்களில் ஆளுங்கட்சிக்கு ஒரு அணுகுமுறை, பிற கட்சிகளுக்கு ஒரு அணுகுமுறை என்ற அடிப்படையில் காவல்துறை செயல்பட்டு வருகிறது. ஆளும் கட்சியால் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பிளக்ஸ் பேனர்கள் வைத்துக் கொள்ள முடியும். சாலையை மறித்து இருபுறமும் கொடிகள், தோரணங்கள் உள்ளிட்டவை கட்டிக்கொள்ள முடியும்.

அதற்கு யாரிடத்திலும் அனுமதி கேட்க தேவையில்லை. காவல்துறை அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் தான் தற்போது சென்னையில் சுபஸ்ரீயின் மரணம் நடந்துள்ளது. இது கண்டனத்திற்குரியது. எனவே பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு ஒரு சில நடைமுறைகளை ஐகோர்ட்டு அறிவித்திருந்தாலும் கூட அதை நடைமுறைப்படுத்தாமல் ஆளும் கட்சியினர் உள்ளனர். எனவே இதற்கென விதிமுறைகளை உருவாக்கி தனி சட்டம் இயற்றினால் இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க முடியும்.

தேசிய கல்வி கொள்கையை எதிர்க்க வேண்டிய தமிழக அரசு, மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் மத்திய அரசு எடுக்கிற எல்லாம் நிலைப்பாடுகளையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தெரிவிக்கிறது. கல்வித்துறையும் அப்படித்தான் இருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது. தேசிய கல்வி கொள்கை என்பது மாணவர்களின் இடைநிற்றல் சதவீதத்தை அதிகரிக்கச் செய்யும். 5-ம், 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவித்ததும் கண்டனத்திற்குரியது.

ஒரே தேசம், ஒரே கலாசாரம் என்ற கொள்கையை அமல்படுத்த கடந்த 5 ஆண்டுகால ஆட்சியின் போது பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டியது. அப்போதே விடுதலை சிறுத்தைகள் கட்சி இது ஆபத்தானது என சுட்டிக்காட்டியது. தற்போதும் அவர்கள் எல்லா முடிவுகளையும் அவரச அவசரமாக எடுத்து வருகின்றனர்.

இந்தி மொழியை தவிர வேறு மொழி எதுவும் இருக்கக்கூடாது, இந்து மதத்தை தவிர வேறு மதம் இருக்கக்கூடாது என்பது தான் அவர்களின் இலக்கு. அதற்கேற்ப கல்விக் கொள்கையையும் மாற்றி வருகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. இன்றைய ஜனநாயகத்தில் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி மீண்டும் சுட்டிக்காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story