தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்
தி.மு.க. இளைஞர் அணியில் புதிய உறுப்பினர்களை சேர்க்க இளைஞர் அணி அமைப்பாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 10 ஆயிரம் இளைஞர்களை புதிய உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 3 தொகுதிகளிலும் நேற்று உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது.
தூத்துக்குடி தொகுதிக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் தூத்துக்குடி ராஜாஜி பூங்கா அருகே நேற்று நடந்தது. மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த் கேபிரியேல் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து இளைஞர்கள் ஆர்வமுடன் தி.மு.க. இளைஞர் அணியில் புதிய உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர். நேற்று சுமார் 280 பேர் தி.மு.க.வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி-குரும்பூர்
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமை கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். விவசாய அணி அமைப்பாளர் ராமர், ஒன்றிய செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குரும்பூரில் நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாமுக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜனகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாம்களில் ஏராளமானவர்கள் தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களாக தங்களை இணைத்துக்கொண்டனர்.
Related Tags :
Next Story