கிருமாம்பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது


கிருமாம்பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 Sept 2019 3:30 AM IST (Updated: 15 Sept 2019 1:41 AM IST)
t-max-icont-min-icon

கிருமாம்பாக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 10 வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பாகூர்,

புதுவை, கிருமாம்பாக்கம் பகுதிகளில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போவதாக போலீசாருக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. இதையொட்டி திருட்டுக் கும்பலை பிடிக்க பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், கிருமாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி தலைமையிலான போலீசார் கிருமாம்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பரிக்கல் பட்டு சாலையில் போலீசார் ரோந்து சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித் தார். அதைத்தொடர்ந்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று தீவிரமாக விசாரித்தனர்.

இந்த விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த நத்தம் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி (வயது 38) என்பதும், அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் முள்ளோடை ஆர்.டி.ஓ. சோதனைச்சாவடி அருகே திருடியது என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கிருமாம்பாக்கம் சரகத்தில் 5 வண்டிகளும், தவளக்குப்பம் காவல் நிலைய பகுதியில் 2 வண்டிகளும், மற்ற இடங்களில் 3 வண்டிகள் என மொத்தம் 10 மோட்டார் சைக்கிள்களை தண்டபாணி திருடி இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. அதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான தண்டபாணி மீது தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மோட்டார் சைக்கிள் திருட்டு ஆசாமியை கைது செய்த கிருமாம்பாக்கம் போலீசாரை தெற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

Next Story